சென்னை: அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை. மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு. படத்தொகுப்பு பரத் விக்ரமன். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா மற்றும் நிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ‘‘கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘லவ் மேரேஜ்’ தயாராகிறது. தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.