கொல்கத்தா: இந்தி வெப் சீரிஸ் ‘பாதாள் லோக்’கில் நடித்தவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவரது தந்தை தீவிர கிரிக்கெட் ரசிகர். அவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியை நேரில் பார்க்க விரும்பி இருக்கிறார். ஸ்வஸ்திகா முகர்ஜி வேறு இடத்தில் இருந்த நிலையில், தனது தந்தைக்காக இரண்டு டிக்கெட்களை ஒரு நபரிடம் கூறி வாங்கி இருக்கிறார். அந்த டிக்கெட்களை ஸ்விக்கி மூலம் அனுப்பியுள்ளனர்.
அப்போது ஸ்விக்கி ஊழியர் அந்த டிக்கெட்டை வாங்கிய பின் பாதி வழியில் ஸ்வஸ்திகா முகர்ஜியின் மொபைல் நம்பரை பிளாக் செய்து எஸ்கேப் ஆகிவிட்டார். டிக்கெட்டை ஸ்வஸ்திகாவின் தந்தையிடம் சேர்த்து விட்டதாக ஸ்விக்கி செயலியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த டிக்கெட்டுகளை அந்த ஊழியர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்வஸ்திகா முகர்ஜி ஸ்விக்கி நிறுவனத்திடம் முறையிட்டும் பயனில்லையாம். ஸ்விக்கி நிறுவனம் அந்த ஊழியரின் போன் நம்பரை தராமலும் புகாரை ஏற்காமலும் ஏமாற்றி வருவதாக ஸ்வஸ்திகா புகார் கூறியுள்ளார்.