மதகஜராஜா: விமர்சனம்

மதகஜராஜா (விஷால்), கல்யாணசுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம் (நிதின் சத்யா) ஆகியோரின் பி.டி வாத்தியார், தனது மகளின் திருமணத்துக்கு அவர்களை அழைக்கிறார். மண்டபத்தில் நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் முடிந்த பிறகு 4 நண்பர்களும் மனம்விட்டு பேசுகின்றனர். அப்போது அரசியல் செல்வாக்குடன் பண பலமும், அடியாட்களும் வைத்திருக்கும் டி.வி நிறுவன முதலாளி சோனு சூட் மூலம் சப்-கலெக்டர் ரமேஷ் சடகோபனுக்கு பணியில் சிக்கல் ஏற்பட்டதையும், நிதின் சத்யாவுக்கு நெசவுத்தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதையும் அறிந்து கொதிக்கும் விஷால், சோனு சூட்டை வீழ்த்த சென்னை வருகிறார்.

இதற்கிடையே அஞ்சலியை விஷால் காதலிக்க, விஷாலை வரலட்சுமி காதலிக்க, டாக்டர் சதாவுக்கு விஷால் ரூட்டு விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. 13 ஆண்டுகள் கழித்து படம் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக இருக்கிறது. ‘எண்டர்டெயின்மெண்ட் கிங்’ என்பதை இயக்குனர் சுந்தர்.சி மீண்டும் நிரூபித்துள்ளார். எதிரிகளை அடித்து அந்தரத்தில் பறக்கவிடும் சிக்ஸ்பேக் விஷால், ‘மை டியர் லவ்வரு’ என்ற பாடலின் மூலம் பாடகராகவும் மாறி அப்ளாஸ் வாங்குகிறார்.

அஞ்சலிக்கும், அவருக்குமான காதல் மசாலா என்றால், வரலட்சுமியின் காதல் கரம் மசாலா. கிளைமாக்சுக்கு முன்பு விஷால், சோனு சூட், சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர், மனோபாலா ‘டெட்பாடி’யுடன் நடத்தும் அலப்பறை இருக்கிறதே, சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறது. பன்ச் டயலாக்கிற்கு சந்தானத்தை விட்டால் ஆள் இல்லை. அவரது காமெடி மிகப்பெரிய பலம். சுவாமிநாதன், மணிவண்ணன், சிட்டிபாபு, மனோகர் உள்பட அவரவர் பங்குக்கு சிரிக்க வைத்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ரகம். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. லாஜிக் பார்க்கவில்லை என்றால், படம் முழுக்க சிரித்துவிட்டு வரலாம். புதுமைகள் எதுவும் இல்லை.

Related Stories: