பக்தர்கள் நலன் காக்கும் பழநி பெரியநாயகி

பழநியில் அறுபடை வீடுகளுள் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அடுத்தபடியாக இங்கு பிரசித்தி பெற்றது பெரியநாயகியம்மன் கோயில். தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம், வைகாசி விசாக திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். இந்த விழாக்களுக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில்தான் கொடியேற்றப்படுகிறது. இக்கோயிலில் விநாயகர், சோமஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், நடராஜர், பார்வதி, தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், வீரபாகு, 63 நாயன்மார்கள் வீற்றிருக்கின்றனர். நவக்கிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன.

Advertising
Advertising

தல வரலாறு

பெரியநாயகி அம்மன் கோயில், நகரின் மையப்பகுதியில் உள்ளது. ஊர்க்கோயில், யானைக்கோயில் எனவும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. வரலாற்று குறிப்புகளிலும், இலக்கிய பாடல்களிலும் இக்கோயில் இடம் பெற்றுள்ளது. கி.பி 7 மற்றும் 8ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், இடைக்கால பாண்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டது என்பதற்கு சான்றுகள் உள்ளன. கி.பி 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் சேர மன்னர்களால் இக்கோயில் சீரமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில், இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலைகள் கோயிலில் அப்போது வைக்கப்பட்டுள்ளன.

ஆயக்குடி மற்றும் நெய்க்காரப்பட்டி ஜமீன் சார்பில் இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளன. கோயில் கோபுர பணிகள் முடிவடையாமல் மொட்டையாக காட்சியளிக்கிறது. இது குறித்த காரணம் தெரியவில்லை. கோயில் உள்மண்டபத்தில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட கற்சிலைகள் மற்றும் தூண்கள் உள்ளன. தல மரமாக நெல்லி மரம் உள்ளது. மடப்பள்ளி அருகில் சந்திரகிரகணம் குறித்த பழங்கால கல்வெட்டு ஒன்று உள்ளது. கோயில் விழாக்களுக்காக யானை ஒன்று வளர்க்கப்படுகிறது.

*******

இக்கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடி லட்சார்ச்சனை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம் மற்றும் வைகாசி விசாக விழாக்களின்போது இங்கு கொடியேற்றம், திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. இவற்றில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு ஒருமுறை வந்து தரிசிக்கும் பக்தர்கள், தங்களின் நலன் மற்றும் குடும்பத்தினரின் நலன் மேம்படுவதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இங்கு பக்தர்களுக்கான அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது. பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கிமீ தூரத்தில் இக்கோயில் உள்ளது.

Related Stories: