ஐந்துமலை ஆளும் ஐயப்பன்

மூர்த்தி சிறிதாகினும்

கீர்த்தி பெரிதென்று செல்வம்

சேர்த்தி அருளும் ஐயப்பா!

காடு போர்த்தி  நடுவில்

மலையை குடைந்து அதில்

வாசம் செய்யும்நீ மெய்யப்பா!

 

ஆண்டுதோறும் உனை விரும்பி

பக்தர் கூட்டம் பெருகுது -இருந்தும்

பக்தி தான் கொஞ்சம் குறையுது!

சந்தேகம் என்பது ஒருதுளி வந்தாலும்

சபரிநாதன் அருள் கிட்டுமா -அவன்

சந்நிதியில் மனம் ஒட்டுமா!

 

பொருளுக்கு பொருளாகி

மூலப்பொருளாக யோகத்தில்

அமர்ந்தவன் யாரப்பா- நம்ம

ஹரிஹர சுதன் புகழ் பாடுங்கப்பா!

 

சத்தியம் காக்கவே

நித்யசேவை செய்யும்

உத்திர சித்தன் ஐயப்பன்!

பத்திய உணவருந்தி

பத்திரம் செய்துவைத்தால்

மனவியாதிக்கு மருந்தாகும்  மூலிகை

மாளிகைபுரத்து காரிகை

மஞ்சளில் வடித்த தூரிகை

 

அழுதாநதியில் கல்லெடுத்து

கரிவலப்பாதை கடந்து

பம்பா நதி அடையும் சுவாமிகள்

பாவங்கள் தொலைய நீராடுங்கள்!

 

சஞ்சலம் மனதில் நீங்க

சத்தமாக சரணம் சொல்லு

சங்கீத மனநிறைவு தங்க

சபரியில் இருமுடியோடு நில்லு!

 

ஐந்துமலை அரசன் கருணை

பைந்தமிழ் சுவை அருணை

கார்த்திகை தீபமாகி பின்

காந்தமலை ஜோதியாகும் பெருமை!

 

அருட்கூடமாகி சூடமாகி

அன்பு மூடமாகி தீபமாடமாகி

அறியா வேடமாகி ஆத்ம பாடமாகி

அருகினில் வருவான் ஐயப்பன்!

 

இயற்கை பெருநிதி குணநிதி

இறங்கிவரும் அருள்நிதி -ஐயன்

இசையாய் வாழும் குளிர்நதி

இன்றே சேர்வோம் அவன் சந்நிதி!

* விஷ்ணுதாசன்

Related Stories: