திருக்கார்த்திகையும் தீபங்களும்

வீடு என்பது தெய்வ அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். தினமும் வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். கார்த்திகை, தீபத் திருநாளில் மட்டுமல்ல தினசரியும் அகல் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். தீபத்தில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவி உள்ளனர். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம்.

* விளக்கை வெறும் தரையில் வைக்காமல் பலகை அல்லது சிறிய தாம்பாளத்தில் வைக்க வேண்டும்.

* இரண்டு விளக்குகள் வைத்து வணங்கக்கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்கு வைத்துத்தான் வணங்க வேண்டும்.

* காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி வணங்கினால் செல்வம் தினமும் பெருகும்.

* காலை, மாலை குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் செல்வம் வற்றாது பெருகுவதுடன் பாவமும் விலகும்.

* விளக்கை கிழக்கு திசை பார்த்துத்தான் வைக்க வேண்டும். விளக்கிற்கு நெய் விட்டு ஏற்றுவது நல்லது. நெய் இல்லாவிடில் நல்லெண்ணெய் விடலாம்.

* காலை மூன்றிலிருந்து ஐந்து மணி வரை தீபமேற்றினால் வீட்டில் சர்வ மங்களம் ஏற்படும்.

* மண்ணால் செய்யப்பட்ட அகல், வெள்ளி, பஞ்சலோக விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்தது. ஐந்து முகமுள்ள விளக்குகளையே பூஜைக்கு ஏற்றுவது நல்லது.

* தீபத்தை ஒரு முகம் ஏற்றுவது மத்திமம். இரண்டு முகம் ஏற்றுவது குடும்ப ஒற்றுமையும், மூன்று முகம் ஏற்றுவது புத்திர சுகத்தையும் கொடுக்கும்.

நான்கு முகம் ஏற்றுவது பசு, பரி இனம் தரும். ஐந்து முகம் ஏற்றுவது செல்வத்தை பெருக்கும்.

* வீட்டில் விளக்கேற்றி வழிபடும்போது பஞ்சால் திரியிடுவதே மிகவும் சிறப்பானது.

* திருக்கார்த்திகை தினத்தில் இல்லங்களில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

* சித்திரக் கோலமிட்டு தீபம் ஏற்றுவது சித்திர தீபம். அடுக்கடுக்கான தீபங்கள் ஏற்றுவது மாலா தீபம். உயரமான இடத்தில் ஏற்றப்படுவது ஆகாச தீபம். நதிநீரில் மிதக்க விடுவது ஜலதீபம்.

* நிலத்தில் நிலையாக இருக்கும் விளக்கு குத்து விளக்கு, கைகளில் தூக்கிச்செல்லும் விளக்கு கை விளக்கு, தொங்க விடப்பட்டிருக்கும் விளக்கு, தூக்கு விளக்கு, எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு, தூண்டாமணி, கோயில்களில் பெண் உருவோடு கைகளில் அகல் ஏந்தி நிற்கும் பாவை விளக்கு. லட்சுமி விளக்கு, குடவிளக்கு, நந்தா விளக்கு, மாட விளக்கு என பல்வகை விளக்குகள் உள்ளன

* தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருஷப தீபம், புருஷா மிருக தீபம், சூல தீபம், கமஉதி(ஆமை) தீபம், கஜ (யானை) தீபம், வியாக்ர (புலி) தீபம், சிம்ஹ தீபம், துவஜ (கொடி) தீபம், மயூர (மயில்) தீபம், பூரண கும்ப ஐந்து தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்.

* கார்த்திகை நாளன்று தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை...

 தீபம் ஜோதி பரப்பிரம்ஹம்! தீபம் சர்வ தமோபஹம்! தீவேன சாத்யதே சர்வம்! சந்த்யா தீபநமோஸ்துதே! என்ற ஸ்லோகத்தைச் சொல்வது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.

* கார்த்திகைத் திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப்பாகும், தேங்காய்த் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து ஸ்வாமிக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்த் துருவல் கொடைத்தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. பக்தர்களின் ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் எனும் தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

* திருவிளக்கின் அடிப்பாகத்தில் பூவைக்கும்போது தாயையும், நடுப்பகுதியில் பூச்சூடும்போது கணவன் மற்றும் தந்தையையும், உச்சிப்பகுதியில் சூட்டும்போது சிவனையும் நினைத்து பூச்சூட்டினால் சகல நலமும் பெறலாம்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

Related Stories: