காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : அங்கதன்

‘‘அவன் தம்பி அங்கதன்...’’ எனும் பிரபலமான வாக்கு ஒன்று உண்டு. அதாவது, ‘‘இந்திரன் வாலியாக வந்து பிறந்தான். அவன் தம்பி உபேந்திரன், அங்கதனாக வந்து பிறந்தான்’’ என்பதே அந்த வாக்கின் பொருள். வாலி - தாரை ஆகியோரின் மகனாக வந்து பிறந்த அங்கதனின் கதாபாத்திரம் மிகவும் சிறியதுதான்; இருந்தாலும், ராமரிடம் பக்திகொண்ட மற்ற கதாபாத்திரங்களுக்கு- எந்த விதத்திலும் குறைவானதல்ல. சொல்லப்போனால், ராம பக்தி கொண்ட மற்ற கதாபாத்திரங்களை விட, அங்கதன் மிகவும் உயர்வானவன் என்பதை, அங்கதனின் பேச்சும் செய்கையும் நடவடிக்கைகளும் நிரூபிக்கும்.

அங்கதம் - என்ற சொல்லுக்கு, தோளணி  / பழிச்சொல் என்றெல்லாம் பொருள் உண்டு. அதன்படிப் பார்த்தால், ராமருக்குத் தோளணியாக இருந்தவன் - அங்கதன். தன் தந்தையைக்கொன்ற ராமர் மீது எந்தப் பழிச்சொல்லும் சொல்லாதவன் அங்கதன். அதே சமயம் தன் மீதும் எந்தவிதமான பழிச்சொல்லும் விழாதபடிக்குச் செயல்பட்டவன் - அங்கதன் என்பவையெல்லாம் வெளிப்படும். அங்கதனின் குழந்தைப் பருவத்தைப்பற்றி, பின்னால் அவனே ராவணனிடம் விவரிக்கப் போவதால், கம்பர் அங்கதனைப்பற்றி அறிமுகப்படுத்தும் இடத்திலிருந்தே பார்க்கலாம்.

ஆம்! ராமரின் அம்புபட்டுக் கீழே விழுந்து கிடக்கும் வாலியை-தந்தையைப் பார்க்கத் தகவலறிந்து ஓடி வருகின்றான் அங்கதன். எந்தக்காலத்திலும் சோர்வடையாத தந்தையை - எதற்கும் கலங்காத தந்தையை, உயிர்போகும் நிலையில் கண்ட அங்கதன் உள்ளம் உடைந்தான். மலர்ப்படுக்கையில் கிடக்க வேண்டிய தந்தை, மண்ணில் மரணப்படுக்கையில் கிடந்ததைக் கண்டதும், மனம் கலங்கினான் அங்கதன்; அழத் தொடங்கி விட்டான்.  ‘‘அப்பா!அப்பா! இந்தப்பூமியில் யாருக்கும் மனதாலோ- செயலாலோ,ஒரு தீங்குகூடச் செய்யாத அப்பா! நீ இப்போது துன்பத்தில் கிடக்கின்றாயே!

அதுதான் போகட்டும்! கொஞ்சம்கூடப் பயப்படாமல், உன்னை நோக்கியமனும் வந்து விட்டானே!அவன் வலிமையை யாரால்சொல்ல முடியும்?’’ என்று அழுதான் அங்கதன். தந்தையின் பக்தியைச்சொல்லி அழுத அங்கதன், தந்தையின் தியாகத்தையும் சொல்லி அழுதான். ‘‘அப்பா! நீ பாற்கடலைக்கடைந்து வெளிப்பட்ட அமுதத்தை, ஒரு துளிக்கூட நீ அருந்தாமல், அப்படியே தேவர்களுக்கு அளித்தாய். அதை வாங்கி உண்ட தேவர்கள் எல்லாம் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால் அமுதம் கொடுத்த நீயோ, மரணத்தைத்தழுவி,மண்ணில் கிடக்கிறாயே!’’ என்று புலம்புகிறான்.

  புலம்பிய அங்கதனுக்கு ஆறுதல்சொல்லத் தொடங்குகிறார் தந்தை. ஆம்!வாலி தான். ‘‘அங்கதா! சிறுபிள்ளையைப் போல் அழாதே! நான் சொல்வதைக்கேள்! பிறவி நோய்க்கு மருந்தாகும் பரம்பொருளே, இதோ! எதிரில் ராமராக

நிற்கின்றது. இவரை வணங்கு!’’ என்றார்.  இவ்வாறு ராமரைப்பற்றி மகனுக்குச்சொன்ன வாலி, மகனைப்பற்றி ராமருக்குச்சொல்லத் தொடங்கினார். ‘‘ராமா! என் மகனான இந்த அங்கதன், அரக்கர் கூட்டத்திற்கு நெருப்பைப் போன்றவன்; செயல்களில் தூய்மை கொண்டவன். இவனை உன் கையில் அடைக்கலமாக ஒப்புவிக்கிறேன் ’’ என்றார்.

அதுவரை தந்தையின் பேச்சைக்கேட்டுக் கொண்டிருந்த அங்கதன், தன் தந்தையைக் கொன்றவர் ராமர் என்ற எண்ணம் கடுகளவுகூட இல்லாமல், ராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். விழுந்து வணங்கிய அங்கதனிடம் ராமர் தன் உடைவாளை நீட்டி, ‘‘ நீ இதைப் பெற்றுக் கொள்!’’ என்றார். ராஜமுறைப்படி, அரசரின் உடைவாள் அவருடைய பிள்ளையிடம்தான் போக வேண்டும். வாலி தன் மகனான அங்கதனை அடைக்கலமாக ராமரிடம் ஒப்படைத்ததாகப் பார்த்தோமல்லவா? அதை ராமர், வாலியின் எதிரிலேயே நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டார்.

அப்புறம் என்ன? வாலி தன் உயிரைத்துறந்து வானுலகை அடைந்தார்.   அதன்பின் சீதையைத்தேடி வானர வீரர்கள் அனுப்பப்பட்ட போது, அங்கதன் - ஜாம்பவான் - அனுமன் முதலானோர் ஒரு பொய்கைக்கரையில் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.  அப்போது அரக்கன் ஒருவன் வந்து, விவரம் தெரியாமல் அங்கதனைப்போய் மார்பில் அறைந்தான். அங்கதனுக்குத் தூக்கம் கலைந்தது எழுந்து பார்த்தவன், ‘‘என்னை அடித்த இந்த அரக்கன்தான் ராவணனோ?’’  என்று எண்ணியவன், ஒரே ஓர் அடி தான் அடித்தான். அந்த அடியின் வேகம் தாங்காத அரக்கன் இறந்து வீழ்ந்தான். இறந்து விழுந்த அரக்கன் பெயர் துமிரன் என்றும் அவன் ராவணன் அல்ல என்றும், ஜாம்பவான் தெளிவு படுத்தினார். இதன்பின் அங்கதனைப்பற்றிய விரிவான தகவல்கள், யுத்த காண்டத்தின் தொடக்கத்தில் வருகின்றன. விபீஷண சரணாகதிக்குப்பின் வரும் நிகழ்ச்சிகள் அவை.

யாராவது ஒருவர் ராவணனிடம் தூதனாகச்சென்று, அவனுக்கு அறவுரையும் அறிவுரையும் கூறிவர வேண்டும் எனத்தீர்மானமானது. யாரை அனுப்புவது? ராமர் தலைமையில் அனைவரும் பேசத் தொடங்குகிறார்கள்.

ஆஞ்சநேயர் ஏற் கனவே தூது போய் வந்திருக்கிறார். மறுபடியும் அவரையே அனுப்பலாம் என்றால், “இவனைத் தவிரவேறு ஆளில்லை போல இருக்கிறது என்று அரக்கர்கள் நினைத்து விடுவார்கள். யாரை அனுப்பலாம்?ம்... அங்கதனைத்தான் தூதாக அனுப்ப வேண்டும். அரக்கர்கள் ஏதேனும் அல்லல் விளைவித்தாலும் அவற்றை எதிர்கொண்டு, எந்த விதமான தீங்குமில்லாமல் திரும்பிவரும் ஆற்றல் கொண்டவன் அங்கதன்” என்றார் ராமர்.

 

  ஆரினி ஏகத்தக்கார்? அங்கதன் அமையும் ஒன்னார்

  வீரமே விளைப்பரேனும் தீதின்றி மீள வல்லான்   (கம்ப ரமாயணம்)

‘‘ராவணனிடம் தூதுபோய்ப் பேசித் திரும்பக்கூடியவன் அங்கதனே’’ என்று ராமரே முடிவு செய்தபின்,யார் மறுக்க முடியும்?  அங்கதனுக்கு ஒரே குஷி! ‘‘ஆஞ்சநேயருக்குப் பதிலாக என்னை அனுப்புகிறார் ராமர் என்றால், இது எவ்வளவு பெரிய பெருமை எனக்கு ’’ என மகிழ்ந்தான். மாருதி அல்லனாகில் நான் எனும் மாற்றம் பெற்றேன் (கம்ப ராமாயணம்).  மகிழ்ச்சியில் இருந்த அங்கதனிடம், ‘‘தேவியை விடுக! இல்லாவிட்டால் போர்க்களத்தில் ஆவியை விடுக! என்று ராவணனிடம் சொல்லி வா!’’  என்றார் ராமர்.

ராமரை வணங்கிப் புறப்பட்டான் அங்கதன். சிங்கம் ஒன்று ஆகாயத்தில் சீறிப்பாய்ந்து போவதைப்போலப் போனானாம்! போனவன், இலங்கையில் புகுந்து ராவணன் சபையை அடைந்தான். அதற்குள்ளாக அங்கதனைக்கண்ட அரக்க வீரர்கள், ‘‘ஆகா! ஏற்கனவே வந்து நம்மைப் படாதபாடு படுத்திய ஆஞ்சநேயன்தான் மறுபடியும் வந்து விட்டான்’’ என்று பய ந்து, வேகமாக ஓடிப்போய் ராவணனைச் சுற்றி நின்று கண்களில் கண்ணீர் வழியப் பயத்தோடு, ராவணனைக் கும்பிட்டுக் கொண்டு நின்றார்கள்.

சீதையைத்தேடி வந்த ஆஞ்சநேயர், இலங்கையில் அசோகவனத்தை அழித்து இலங்கையைக் கொளுத்திய செயல், அரக்கர்களை அந்த அளவிற்குப் படாதபாடு படுத்தி, பயத்தில் ஆழ்த்தியிருந்தது.அழுத கண்களும் தொழுத

கைகளுமாக நின்ற அரக்கர்களுக்கு நடுவில் இருந்த ராவணனைக்கண்ட அங்கதன் வியந்தான். ராவணனின் தோற்றமும் அவன் அமர்ந்திருந்த நிலையும் தாம்,அங்கதனை அவ்வாறு வியக்கச்செய்தன. ‘‘இவனை வெல்ல, யமனால்கூட முடியாது போலிருக்கிறதே’’ என்று ஒரு சில விநாடிகள் நினைத்த அங்கதன், பழைய நினைவுகளை எண்ணிச் சற்று ஆறுதல் அடைந்தான்.

‘‘இப்படிப்பட்ட ராவணனை வென்ற என் தந்தையை,ஓர் அம்பாலேயே வீழ்த்திய ராமரால்தான் இவனைக்கொல்ல முடியும்’’ என்று நினைத்தபடியே, ராவணன் எதிரில்போய் நின்றான் அங்கதன். அவனைப் பார்த்த ராவணன், ‘‘யார் நீ? எதற்காக வந்தாய்? என்னைச்சுற்றி நிற்கும் இவர்கள் உன்னைக்கொன்று தின்பதற்கு முன்னால் சொல்லி விடு!’’ என்றான்.   அங்கதனுக்குச் சிரிப்புவந்து விட்டது. பற்களைக்காட்டிச் சிரித்தான். காரணம்? அங்கதனைக் கொன்று தின்னக்கூடிய அளவிற்கு ஆற்றல் படைத்தவர்களாக இருந்தால், அந்த அரக்க வீரர்கள் ஏன் அங்கதனைப் பார்த்தவுடன் பயந்துபோய், ராவணனிடம் ஓடிவர வேண்டும்?

 (அங்கதன் தொடரும்)

பி.என் பரசுராமன்

படங்கள் : மது ஜெகதீஷ்

Related Stories: