போலீஸ் ஸ்டேஷனில் தனது ஆட்கள் மீது அத்துமீறியதால், அனைத்து போலீசாருக்கும் செட்டில்மெண்ட் கொடுத்து ராஜினாமா செய்ய வைக்கும் புஷ்பராஜ் மீது கொலைவெறியுடன் பாயும் பஹத் பாசில், தன்னிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எம்.பி ராவ் ரமேஷிடம் சொல்கிறார். முன்னதாக முதல்வர் ‘ஆடுகளம்’ நரேனை சந்தித்த பிறகு அவமானப்பட்ட புஷ்பராஜ், பலநூறு கோடி ரூபாயை வீசி, ராவ் ரமேஷை ஆந்திர மாநில முதல்வராக்குகிறார். பஹத் பாசிலை மீறி புஷ்பராஜ் செம்மரங்களை கடத்தினாரா? ஒன்றிய அமைச்சர் ஜெகபதி பாபுவுக்கும், புஷ்பராஜூக்கும் என்ன பிரச்னை? புஷ்பராஜின் அண்ணன் வினோத் ராஜின் மகள் திருமணத்தில் வெடிகுண்டு வெடித்ததில் புஷ்பராஜூம், அவரது மனைவி ராஷ்மிகா மந்தனாவும் என்ன ஆனார்கள் என்பது மீதி கதை.
முதல் பாகத்தைவிட 2ம் பாகத்தில் மசாலா, ஆக்ஷன், பேமிலி சென்டிமெண்ட் அதிகம். இயக்குனர் பி.சுகுமார் பக்கா கமர்ஷியல் பேக்கேஜூடன் படத்தைக் கொடுத்து, புஷ்பராஜின் இமேஜை மேலும் உயர்த்தியுள்ளார். பஹத் பாசிலுடன் சவால்விடும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனாவின் முத்தத்தில் கிறங்கி பெட்டிப்பாம்பாய் மாறுவது சுவாரஸ்யம். தடையாக வருபவர்களை பணத்தாலேயே விலைக்கு வாங்கும் அவர், எதிரிகளைப் பொளந்து கட்டும் காட்சிகளில் எரிமலையாய் சீறியிருக்கிறார். பாடல்களில் அதிவேக நடனமும், கிளைமாக்சில் அண்ணன் மகளுக்காக எடுக்கும் விஸ்வரூபமும் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.
கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்பும் வரும் என்று நிரூபித்து இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. ‘கிஸ்ஸிக்’ பாடலில் ஸ்ரீலீலா அதிவேகமாக நடனமாடி மயக்குகிறார். பஹத் பாசில் ஆவேச புலியாக மாறி, அல்லு அர்ஜூனை அடக்குவதிலேயே நேரத்தைக் கடத்துகிறார். அனுசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், சுனில், ஜெகபதி பாபு போன்றோர் தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். பாடல், சண்டை, செம்மரக்கடத்தல் காட்சிகளில் ஒளிப்பதிவும், விஎஃப்எக்ஸும் மிரட்டியுள்ளன. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மாஸ் ரகம். பின்னணி இசையில் சாம் சி.எஸ் அசத்தியுள்ளார். ஹீரோயிசத்துக்காக லாஜிக்கை மீறிவிட்டனர். முதல்வரையே மாற்றுவது, ஜப்பான் கண்டெய்னரில் 42 நாட்கள் புஷ்பராஜ் இருந்ததாக சொல்வது எல்லாம் காதில் பூ சுற்றும் ரகம். 3ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளனர்.