பெளர்ணமியில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும். பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பூமி சூரியனை சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி ஆகும். சந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை ஆகும். ஆன்மீகரீதியாக பார்க்கும்போது தட்சனின் 27 மகள்களை சந்திரன் திருமணம் செய்திருந்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டும் பாசத்துடன் நடந்து கொண்டு ஏனைய மனைவியரைப் புறக்கணித்தார்.

இதனால் வருந்தமடைந்த தட்சனின் மகள்கள் தந்தையிடம் தங்களது கணவரின் செயல்பாடு குறித்து முறையிட்டனர். தட்சன் சந்திரனிடம் எல்லா மனைவியரிடமும் அன்பு செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சந்திரன் தட்சன் சொன்னதை ஏற்காமல் ரோகிணியிடம் மட்டும் அன்பு செலுத்தினார். இதனால் கோபம் அடைந்த தட்சன் சந்திரனின் ஒளி மங்கும்படி ஆணையிட்டார். ஒளியிழந்த சந்திரன் இறைவனான சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனுக்கு ஒளியினைக் கொடுத்து தேய்து வளரும்படி வரம் அருளினார். சிவபெருமானின் வரத்தின்படி சந்திரன் பதினைந்த நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும், பதினைந்து நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும் காட்சியளிக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பெளர்ணமி நாளில் வீட்டிலும்,கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.

பெளர்ணமி வழிபாடு:

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும். பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது.

அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பூஜை நடத்தப்படுகின்றது.

Related Stories: