500 பேருக்கு பதில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியதால் சன்னி லியோன் டான்ஸ் நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை

ஐதராபாத்: ஐதராபாத்தில் ஜூபிலிஹில் பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் பாலிவுட் நைட் என்கிற இரவு நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோன் கலந்து கொண்டு நடனம் ஆடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தனியார் ஆப் மூலமாக 500 பார்வையாளர்களுக்கு பெரும் கட்டணத்தில் டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி இரவு 11 மணி முதல் 12.30 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இரவு 8 மணியிலிருந்து கட்டணம் செலுத்திய பார்வையாளர்கள் அந்த ஓட்டலுக்கு வர துவங்கினர். இதற்கிடையே அந்த வழியாக செல்பவர்கள் பலரும் இதை அறிந்து, ஓட்டலுக்குள் அத்துமீறி நுழைய தொடங்கிவிட்டனர்.

இதனால் 500 பேருக்கு மட்டும் அனுமதி கிடைத்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டலுக்கு உள்ளேயும், வெளியில் மேலும் பலரும் கூடிவிட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இது தொடர்பாக போலீசில் அனுமதி பெறாதது ஏன் என கேட்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி தந்தால், ஏதேனும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி, நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர். இதையடுத்து அந்த ஓட்டல் நிர்வாகம் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தது. இந்நிகழ்ச்சி வேறொரு நாளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தது. ஐதராபாத்தில் வேறொரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன், நிகழ்ச்சி ரத்தானதால் அங்கிருந்து கோபத்துடன் மும்பை புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

Related Stories: