சென்னை: நயன்தாராவின் கணவரும், தமிழ்ப் பட இயக்குனருமான விக்னேஷ் சிவன், தற்போது ‘லவ் டுடே’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் ‘லைப் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ஆவணப்படம் நெட்பிளிக்சில் வெளியானது. அதில் ’நானும் ரௌடி தான்’ என்ற படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட 3 பக்க அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தளத்திலும், இன்ஸ்டாகிராமிலும் தனுஷ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தார். இதனால், தொடர்ந்து காரசாரமான கருத்துகள் பதிவாகி வந்தன. இந்நிலையில், திடீரென்று விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தள கணக்கை டி-ஆக்டிவேட் செய்துவிட்டார்.
அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், தனுஷுக்கு எதிராக தொடர்ந்து அவர் பதிவு செய்து வந்த கமென்டுகளுக்கு எதிராக தனுஷ் ரசிகர்களும், நெட்டிசன்களும் வெளியிட்ட பதிலடி கமென்டுகள் சர்ச்சைக்குரியதாக இருந்ததால், உடனே விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தள கணக்கை டி-ஆக்டிவேட் செய்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.