அனந்தனுக்கு 1000 நாமங்கள்

193. ஹம்ஸாய நமஹ (Hamsaaya namaha)

இரண்டு நண்பர்கள் ஓர் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். அங்கே ஓர் அன்னப் பறவை மிகவும் வருத்தத்தோடு அமர்ந்திருந்தது. அதைக் கண்ட அவ்விரண்டு நண்பர்களுக்கும் இடையே ஓர் உரையாடல் நடைபெற்றது.முதல் நண்பர்: பொதுவாக அன்னப் பறவை தாமரையிலுள்ள தேனை நன்கு பருகிவிட்டு, பெண்களைப் போலவே ஆனந்தமாக நடைபழகிக் கொண்டிருக்கும். ஆனால் இங்கே ஓர் அன்னப் பறவை அவ்வாறு செய்யாமல் சோர்ந்து போய்  உட்கார்ந்திருக்கிறதே! என்ன காரணமாக இருக்கும்?இரண்டாம் நண்பர்: அன்னப் பறவை தனது சக்தியை இழந்து விட்டது! அதனால் தான் சோர்ந்து போய்விட்டது!முதல் நண்பர்: என்ன சக்தி?இரண்டாம் நண்பர்: அது தான் பிரம்மா அன்னத்துக்கு வரமாக அளித்த சக்தி. அன்னப் பறவை பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாகனமாக இருப்பதால், பிரம்மா அன்னத்தின் நாவுக்கு ஒரு சக்தியை அளித்தார்.

பால், தண்ணீர் இரண்டையும்  கலந்து வைத்தால், அன்னம் தண்ணீரை விலக்கி விட்டுப் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும்! அந்தச் சக்தியை இப்போது அன்னம் இழந்துவிட்டது!முதல் நண்பர்: பிரம்மா தந்த வரம் பொய்த்து விட்டதா? ஏன் பொய்த்தது?இரண்டாம் நண்பர்: ஹம்ஸம் தன் சக்தியை இழந்தமைக்கு ராமாநுஜர் என்ற பரமஹம்ஸர் தான் காரணம்! ராமாநுஜர் பூமியில் அவதாரம் செய்து, வேதத்தின் சரியான பொருளை அனைத்து மக்களுக்கும் காட்டிக் கொடுத்தாரல்லவா? அதனால்  ராமாநுஜரின் புகழ் உலகெல்லாம் பரவியது. புகழின் நிறம் வெண்மை. ராமாநுஜரின் புகழின் வெண்மை அனைத்திடங்களிலும் பரவியதால், உலகமே வெளுத்து விட்டது. அவ்வாறே தண்ணீரும் பால் போல் வெளுத்து விட்டது. இப்போது தண்ணீர்,  பால் இரண்டுமே வெளுத்திருப்பதால், தண்ணீர் எது, பால் எது எனப் பிரிக்க முடியாமல், தனது சக்தியை இழந்து அன்னப் பறவை வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறது. இத்தகைய ராமாநுஜரின் புகழ் என்றும் ஓங்கி வளரட்டும்!

இந்த உரையாடலை ஒரு பாடலின் வடிவில் வேதாந்த தேசிகன் அமிருதாஸ்வாதினீயில் பாடியுள்ளார்

“அலர்ந்த அம்புயத்து இருந்து தேன் அருந்தி இன்னகல்

அல்குலார் அசைந்து அடைந்த நடைகொளாதது அனம் எனோ?”

“நலம் தவிர்ந்ததால்!” “அது என் கொல்?” “நாவின் வீறு இழந்ததால்!”

“நா வணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என்?”

“சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச்

சரிவிலேன் எனக்கனைத்து உரைத்த ஏதிராசர் தம்

வலம் தரும் கை நாயனார் வளைக்கிசைந்த கீர்த்தியால்

வாரி பால் அதாமதென்று மாசில் வாழி வாழியே!”

ஹம்ஸப் பறவை சாரமில்லாத தண்ணீரை விலக்கி விட்டுச் சாரமான பாலை மட்டும் எடுத்துக் கொள்வது போல, சிறந்த சந்யாசிகள் சாரமில்லாத உலக விஷயங்களை விடுத்துச் சாரமான இறைவனையே தங்கள் நெஞ்சில் கொள்வதால்  பரமஹம்ஸர்கள் என்று போற்றப்படுகிறார்கள். அத்தகைய பண்பால் அன்னப் பறவையை ராமாநுஜர் வென்று விட்டார் என்பதையே தேசிகன் கவிநயத்துடன் இப்பாடலில் குறிப்பால் உணர்த்துகிறார்.இப்படிப்பட்ட பரமஹம்ஸ சந்யாசியான ராமாநுஜர் முதன்முதலில் திருவரங்கத்துக்கு வந்த போது, “வாரும் பரமஹம்ஸரே!”, என்று அவரை வரவேற்றார் திருவரங்கநாதன். மேலும், “நான் அன்னமாக அவதாரம் செய்த ‘ஹம்ஸன்’. நீங்களோ  என்னையே மிஞ்சிய ‘பரமஹம்ஸர்’!” என்றார் திருமால்.

ராமாநுஜரோ, “இல்லை இல்லை! அடியேனைப் பரமஹம்ஸனாக ஆக்கியவனே நீயல்லவோ? ‘ஹம்ஸ:’ என்றால் அன்னம் என்று மட்டும் பொருளில்லை, தேவையில்லாத பந்தங்களை வெட்டி விடுபவர் என்றும் பொருளுண்டு. எனது  தேவையில்லாத பந்தங்களை வெட்டிவிட்டு என்னை உன் திருவடிகளில் சேர்த்துக் கொண்ட நீதான் உண்மையான ஹம்ஸன். ஹம்ஸனும் நீயே! பரமஹம்ஸனும் நீயே!” என்றார்.‘ஹந்தா ஸங்கஸ்ய ஹம்ஸ:’ என்கிறது வடமொழி நிகண்டு. அடியார்களுக்கு இருக்கும் தேவையில்லாத பந்தங்களை விலக்கித் தன் திருவடிகளில் அவர்களை இணைத்துக் கொள்வதால் திருமால் ‘ஹம்ஸ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே  ஸஹஸ்ரநாமத்தின் 193-வது திருநாமம்.“ஹம்ஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு இருக்கும் தேவையற்ற தளைகளைத் திருமால் விலக்கி, தூய பக்தியை வளர்த்தருள்வார்.

194. ஸுபர்ணாய நமஹ (Suparnaayanamaha)

கருடனின் தாயான வினதையை, அவளது தமக்கையான கத்ரு சிறை வைத்திருந்தாள். வினதையை விடுவிக்க வேண்டுமென்றால், தேவ லோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வந்து தரவேண்டும் என்று கத்ருவும் அவளது பிள்ளைகளும்  நிபந்தனை விதித்தார்கள். தேவாமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயை மீட்பதற்காக, தேவலோகத்தை நோக்கி வேகமாகப் பறந்தார் கருடன்.கருடன் அமிர்த கலசம் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட தேவர்கள், அவருடன் போர் புரிய வந்தார்கள். வரிசையாக ஆயிரம் தேவர்கள் கருடனை வழிமறித்து நின்று கொண்டார்கள்.

அவர்களுள் அக்னி பகவான், கருடன்  மேல் தீயை உமிழ்ந்தார். அது நெருப்புச் சுவராக உருவானது. “இந்த வெப்பம் மிக்க நெருப்புச் சுவரை முடிந்தால் தாண்டிப் பார்!” என்றார் அக்னி. கருடன் தனது சிறகுகளை வேகமாக அசைத்தார். அதிலிருந்து கிளம்பிய காற்று அந்த நெருப்பை  முழுமையாக அணைத்து விட்டது. அக்னி பகவான் செய்வதறியாமல் திகைத்துப்போனார்.கருடனின் சிறகுகள் எழுப்பிய காற்று, புழுதியைக் கிளப்பவே, அது தேவர்களின் பார்வையை மறைத்து விட்டது. போர் புரிய முடியாமல் தேவர்கள் திணறினார்கள். வாயு பகவான் அந்தக் காற்றை அப்படியே விழுங்கினார்.

மீண்டும் போர்  தொடர்ந்தது.பேருருவம் எடுத்த கருடன், நூற்றுக் கணக்கான தேவர்களைத் தமது அலகால் கொத்திக் கொத்தித் தூக்கி வீசி ஏறிந்தார். அத்தனை தேவர்களையும் வீழ்த்தி விட்டு அமுதம் இருக்கும் இடத்துக்குச் சென்றார். அப்போது பெரும் நெருப்பு அவரைத்  தடுத்தது. அந்தத் தீயின் வெப்பம் கருடனின் உடலில் மிகுந்த வலியை உண்டாக்கியது. பூமிக்குப் பறந்து வந்த கருடன், பல நதிகளிலிருந்து நீரை மொண்டு சென்று அத்தீயை அணைத்தார்.

அடுத்தபடியாக, இரண்டு பெரிய இரும்புச் சக்கரங்கள் சுற்றிக் கொண்டிருந்தன. அவற்றிலுள்ள கூர்மையான பற்கள் அதன் வழியாகச் செல்பவரின் உடலைத் துளைத்துவிடும். அதைக் கண்டு அஞ்சாத கருடன், சிறிய வடிவம் எடுத்துக்கொண்டு  சக்கரங்களுக்கு இடையே சென்று உள்ளே நுழைந்தார்.அங்கே காவலுக்கு இரண்டு பாம்புகள் இருந்தன. அவற்றைத் தனது அலகால் கொத்திப் பொடிப் பொடி ஆக்கினார். அமிர்த கலசத்தைக் கையில் எடுத்துக் கொண்டதும் பேருருவம் கொண்டார் கருடன். இரும்புச் சக்கரங்கள் மேல் மோதி  அவற்றைத் தூள் தூளாக்கி விட்டு வெளியே வந்தார்.தன் தாயை மீட்கும் ஆவலுடன் கத்ருவின் இருப்பிடத்தை நோக்கிப் பறந்த கருடனைத் தேவேந்திரன் தடுத்தான்.

“எங்கள் தேவலோகத்துக்கே வந்து அமுதத்தைத் திருடிக் கொண்டு அவ்வளவு எளிதில் தப்பிச் சென்று விடுவாயா?” என்று சொன்ன  இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் கருடனைத் தாக்கினான். அப்போது தனது இரண்டு இறகுகளை மட்டும் உதிர்த்து விட்டுக் கருடன் பறந்து சென்றார்.செல்லும் போது, “இந்திரா! உனது வஜ்ராயுதத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த வஜ்ராயுதம் ததீசி என்னும் முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அந்த முனிவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக  இரண்டு இறகுகளை மட்டும் உதிர்த்தேன்!” என்று சொல்லி விட்டுச் சென்றார் கருடன்.

ததீசி முனிவரின் மேல் கருடன் வைத்திருந்த மரியாதையைக் கண்ட மற்ற முனிவர்கள், ‘ஸுபர்ணன்’ என்று கருடனைப் போற்றினார்கள். ஸுபர்ணன் என்றால் அழகிய இறகுகளை உடையவன் என்று பொருள். அருகிலிருந்த சில முனிவர்கள்,  “ஸுந்தர பர்ணன் அல்லது சோபன பர்ணன் என்றாலும் அழகிய இறகுகளை உடையவன் என்று தானே பொருள்? ஸுபர்ணன் என்று தான் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அம்முனிவர்கள், “திருமால் அன்னமாக அவதரித்த போது, தனது சிறகொலியாலேயே வேதப் பொருளை நமக்கு விளக்கினார். அதனால் அவருக்கு ஸுபர்ணன் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஸுபர்ணனாகிய ஹம்ஸாவதாரப் பெருமாளின்  அருளால் தான் வேத சொரூபியாகவும், பற்பல சக்திகள் பொருந்தியவராகவும் கருடன் திகழ்கிறார். எனவே அவரது பெயரையிட்டுக் கருடனை அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்!” என்றார்கள்.‘பர்ண:’ என்றால் இறகு என்று பொருள். ‘ஸுபர்ண:’ என்றால் அழகிய இறகுகளை உடையவர் என்று பொருள். வேத ஒலிகளைத் தன்னகத்தே உடைய அழகிய இறகுகளைக் கொண்டமையால், ஹம்ஸாவதாரத்தில் திருமால் ‘ஸுபர்ண:’  என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 194-வது திருநாமம்.“ஸுபர்ணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வேதத்தின் உட்பொருளைத் திருமால் உணர்த்தி  அருள்வார்.

195. புஜகோத்தமாய நமஹ (Bhujagothamaaya namaha)

(195-வது திருநாமமான ‘புஜகோத்தம:’ முதல், 199-வது திருநாமமான ‘ப்ரஜாபதி:’ வரையுள்ள 5 திருநாமங்கள் ஆதிசேஷன் மேல் திருமால் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலமான ‘பத்மநாப’ ரூபத்தை விளக்கவந்தவை.)பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மேல் சயனித்திருந்தார். அப்போது மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் திருமாலை எதிர்த்துப் போர் புரிவதற்காக வந்தார்கள். ஆனால் உறங்கிக் கொண்டிருந்த திருமால் அவர்களை வருவதைக்  கவனிக்கவில்லை.எனினும் திருமாலின் படுக்கையாய்த் திகழும் ஆதிசேஷன், அந்த அசுரர்கள் வருவதைக் கண்டார். திருமாலை எழுப்பி, அசுரர்களின் வரவைச் சொல்லி எச்சரிக்க நினைத்தார். ஆனாலும் திருமாலின் தூக்கத்துக்கு இடையூறு செய்ய அவருக்கு மனம் வரவில்லை. என்ன செய்வது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அதற்குள், மதுவும் கைடபனும் திருமாலை நெருங்கி விட்டார்கள். எனவே ஆதிசேஷன் தன் வாயிலிருந்து நெருப்பை உமிழ்ந்து மதுவையும் கைடபனையும் எரித்து விட்டார். இருவரும் கருகிச் சாம்பலானார்கள்.இருவரையும் எரித்தபின் ஆதிதேஷன் சிந்தித்துப் பார்த்தார். “திருமால் நமக்குத் தலைவர். நாம் அவருக்குத் தொண்டன். அவ்வாறிருக்க, தலைவரின் அனுமதியில்லாமல் தொண்டன் ஒரு செயலைச் செய்யலாமா? திருமாலின் உத்தரவைப் பெற்றுக் கொண்டல்லவா இந்த இரு அசுரர்களையும் நாம் கொன்றிருக்க வேண்டும்?” என்று கருதினார். தனது செயலை எண்ணி வருந்திய ஆதிசேஷன் வெட்கத்தால் தலை குனிந்தார்.

சிறிது நேரம் கழித்துக் கண் விழித்த திருமால், தலைகுனிந்திருக்கும் ஆதிசேஷனைப் பார்த்து, “உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிகிறதே! என்ன ஆயிற்று?” என்று கேட்டார். ஆதிசேஷன் நடந்தவற்றைத் திருமாலிடம் விளக்கினார். “உங்களது  தொண்டனான அடியேன், உங்களிடம் அனுமதி பெறாமலேயே இங்கு வந்த இரண்டு அசுரர்களை எரித்தது தவறல்லவா? நீங்கள் அவர்களுக்கு ஒரு தண்டனையை விதித்தால், அதை நான் நிறைவேற்றலாம். ஆனால் நானே தண்டனையைத்  தீர்மானிக்கக் கூடாதல்லவா?” என்று பணிவுடன் கூறினார்.

“நீ செய்ததில் எந்தத் தவறும் இல்லை! நான் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அனைத்து உயிர்களும் எனக்குத் தொண்டர்கள். தலைவனுக்கு மேன்மை சேர்ப்பதும், தலைவனுக்கு ஆபத்து வருகையில் காப்பதும் தானே ஒரு தொண்டனின்  கடமை? அதைத் தான் நீ செய்திருக்கிறாய்! எனவே நீ எனக்குத் தொண்டு செய்ததை எண்ணி மகிழ வேண்டுமே தவிர வருந்தக்கூடாது!” என்று திருமால் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்து, திருமால் முன் தலையைச் சாய்த்து வணங்கினார்  ஆதிசேஷன்.

இன்றும் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமெய்யம் (திருமயம்) திவ்ய தேசத்தில் இக்காட்சியைக் காணலாம். ஆதிசேஷன், தன் மேல் சயனித்திருக்கும் சத்தியமூர்த்திப் பெருமாளை நோக்கித் தனது தலைகளைத் தாழ்த்திக் கொண்டு பணிவுடன் விளங்குவார்.வடமொழியில் சேஷன் என்றால் தலைவனுக்கு மேன்மை சேர்ப்பதற்காகவே வாழும் தொண்டன் என்று பொருள். அத்தகைய தொண்டராக ஆதிசேஷன் எப்போதும் விளங்குவதால் தான் அவர் ஆதி “சேஷன்” என்று

அழைக்கப்படுகிறார்.

“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்அணையாம் திருமாற்கு அரவு”என்ற பாசுரத்துக்கேற்ப அனைத்து விதமான தொண்டுகளையும் ஆதிசேஷன் திருமாலுக்குச் செய்கிறார்.‘புஜக:’ என்றால் பாம்பு என்று பொருள். ‘உத்தம:’ என்றால் தலைவர் என்று பொருள். ஆதிசேஷனாகிய புஜகனுக்குத் தலைவராக விளங்கி, அவர் மேலே எப்போதும் சயனித்திருப்பதால், திருமால் ‘புஜகோத்தம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே  ஸஹஸ்ரநாமத்தின் 195-வது திருநாமம்.ஆதிசேஷன் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் பிரதிநிதி. ஆதிசேஷனைப் போல் ஒவ்வொரு ஜீவாத்மாவும் திருமாலுக்கு சேஷபூதர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.“புஜகோத்தமாய நமஹ” என்று தினமும் நாம் சொல்லி வந்தால், திருமாலுக்கும் நமக்கும் உள்ள சேஷ-சேஷி உறவை நன்கு உணரும்படித் திருமால் அருள்புரிவார்.(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: