நல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்

காரைக்குடி - கொப்புடைய நாயகி

செட்டி நாட்டு மக்களின் குல தெய்வம். எல்லாமே கொப்புடையவள் கைகளில்தான் என்று சரணாகதி செய்து விட்டு இப்பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அம்மனின்  பாதத்தில் கடைகளின் சாவியை வைத்து எடுத்துக்கொண்டு வந்துதான் கடையைத் திறக்கிறார்கள். ஆதியில் வீரம்மிக்க மருது சகோதரர்கள், மோர் விற்ற  இடையர் குல கிழவி போன்றோரால் திருப்பணி செய்யப்பட்டது. இத்தலத்தின் ஆச்சரியமான சிறப்பே மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஐம்பொன்னாலான  நாயகியே உற்சவ காலங்களில் வீதி உலா வருவதுதான்.

வேறெங்கும் இல்லாத நேர்த்திக் கடனாக பக்தர்கள் விரும்பிய நாளில் அம்பாளை புறப்பாடு செய்து திருவீதி உலா வரச் செய்யலாம். அதற்கான செலவை  அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இரட்டை மணிமாலை, பிள்ளைத் தமிழ் என்று இவளின் புகழை பலர் எழுதியிருக்கின்றனர். ஒப்பில்லாத வரப் பிரசாதியாக  கொப்புடைய நாயகி திகழ்கிறாள். அம்மா... என் குழந்தைகளையும் நீதான் பார்த்துக்கணும் என்று பரம்பரையாக பாதம் பணிவதை இங்கு சகஜமாகக் காணலாம்.

அம்பாளின் காதில் அணிந்திருக்கும் நகையின் பெயரே கொப்பு. இதற்கு கிளை என்று பொருள். வம்சத்தை கிளைகள்போல பெருகச் செய்வதால் இவளுக்கு இந்தப்  பெயரோ. காரை மரங்கள் அடர்ந்திருந்த இத்தலத்தில் இவள் தவம் மேற்கொண்டாள். அவள் அவ்வாறு தவத்திற்கு அமர்ந்த கதை தனித்த புராணமாக விரியும்.  அவள் தவமிருந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது. குழந்தைப்பேறு வேண்டும் என்று வந்தோரை அவள் கைவிடுவதே இல்லை. ‘‘இதுக்குத்தானே நான்  இங்க இருக்கேன்’’ என்பதுபோல வீற்றிருக்கிறாள்.

கீழ்மாந்தூர் - மகாமாரியம்மன்

சந்தைக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற பார வண்டியின் முன்புறத்தில் அதிக கணம் கூடியது. அந்த இரவு நேரத்தில் வழியில் ஓரத்தில் கிடந்த கருங்கல்லை  ஏற்றி எடையை சமப்படுத்தினர். காலையில் பாரத்தை இறக்கும்போதுதான் அடடா... அது கருங்கல் அல்ல. அம்மன் சிலை என்று தெரிந்தது. என்ன செய்வது  என்று தெரியாது செருகுடி எனும் ஊரிலுள்ள குளத்தில் போட்டனர். பின்னர் அங்கிருந்து ரங்கராஜபுரம் எனும் ஊரிலுள்ள குளத்திலும் போட்டுவிட்டுச் சென்றனர்.  

இப்படி மும்மூன்று மாதங்கள் இரு ஊர் குளத்தில் அம்மன் சிலை இருந்தது. தற்போது அறங்காவலர்களாக இருப்போர்களின் முப்பாட்டனார் கனவில் அம்மன்  தோன்றினாள். ‘‘நான் ஓர் குளத்தில் இருக்கிறேன். என்னை எடுத்து கோயில் கட்டுங்கள்’’ என்று ஆணையிட்டாள். இந்தக் கனவு ஒருவருக்கு மட்டுமல்லாது, பலருக்கும் வந்தது. எந்த குளம் தெரியாதவர்கள் ஆங்காங்கு விசாரித்தபடி சென்று ரங்கராஜபுரம் குளத்தில் தேடியபோது அன்னை கிடைத்தாள்.  வாரி எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அழகாக ஆலயம் எழுப்பினார்கள்.

இன்றும் பதினான்கு கிராமங்களை இந்த அம்பிகை ஆண்டு வருகிறாள். திருவிழாவின்போது இந்த கிராமங்களுக்கெல்லாம் அம்மன் சென்று வருகிறாள்.  பிரம்மோற்சவத்தன்று மணிமகுடம் சூட்டி தேரெடுத்து அலங்காரமிட்டு பக்திப் பரவசத்தோடு கொண்டாடுவார்கள். குழந்தை பாக்கியத்திற்காக எப்போதும் இங்கு  பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் மயிலாடுதுறைக்கும் அருகேயுள்ள பந்தநல்லூருக்கு அருகே கீழ்மாந்தூர் உள்ளது.

ஆனைமலை -மாசாணியம்மன்

நன்னனூரை ஆண்ட நன்னன் தோட்டத்தில் விளையும் மாம்பழத்தை யார் பறித்து சாப்பிட்டாலும் மரண தண்டனைதான். ஒருமுறை பழம் நழுவி ஆற்றோடு  வந்தது. மிதந்து வந்த பழத்தை கன்னி ஒருத்தி சாப்பிடும்போது வீரர்கள் பார்த்தனர். மரண தண்டனையும் விதித்தனர். எனக்குத் தெரியாது உண்டு விட்டேன் என்று  கேட்டுப் பார்த்தாள். ஆனாலும், மரண தண்டனை விதித்தனர். ஆனாலும், நீதி தேவதையின் கண்கள் திறந்தன. அந்தக் கன்னியே மயானத்திலிருந்து மாபெரும்  சக்தியாக மாசாணியம்மனாக விதிர்த்தெழுந்தாள். தன்னைப்போல வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறார்கள்.

எங்கேனும் அநீதி இழைக்கப்படுகிறதெனில் இவளால் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. இங்குள்ள அம்மனுக்கு மக்கள் தங்கள் குறைகளை சொல்லி  மிளகாய் அரைத்துப் பூசுவார்கள். என்ன வேண்டிக் கொண்டாலும் அது தொண்ணூறு நாட்களுக்குள் நிறைவேறிவிடும். வடக்கே காலும், தெற்கே தலையும் வைத்து  பிரமாண்ட உருவமாகப் படுத்திருக்கிறாள். இவளது திருமேனி ஆற்று மணலால் ஆனது. மேலே சுதையால் பூசியிருக்கிறாள். லட்சக்கணக்கான மக்களின்  குலதேவதையாக விளங்குகிறாள். பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆனைமலையில் அருட்பாலிக்கிறாள்.

கொரநாட்டுக் கருப்பூர்- பெட்டி காளியம்மன்

‘‘ஏம்மா... நீ புள்ளதாச்சி தானேம்மா. ஏம்ப்பா நீ இன்னிக்கு முகச்சவரம் பண்ணினியா’’ தம்பதியர் இரு கேள்விகளுக்கும் தலையாட்டினார்கள்.  ‘‘மன்னிக்கணும்மா. நீங்க ரெண்டுபேரும் பெட்டிக்காளிய தரிசனம் பண்ணமுடியாதும்மா. ஏம்ப்பா நீ வேணா நாளைக்கு வாப்பா. நீ குழந்தை பெத்துகிட்டு வந்து  தரிசனம் பண்ணிக்க தாயி. காளியாத்தா இங்க ரொம்ப உக்கிரமா இருக்காம்மா. எண்ணெய் தேய்ச்சி குளிச்ச அன்னிக்குகூட தரிசனம் கூடாதும்மா’’ என்றவுடன்  அவர்கள் வாயிலருகே நின்றார்கள். சிரசுக்கு மீது கைகளை உயர்த்தி ராஜகோபுர தரிசனம் முடித்துத் திரும்பினார்கள்.

மாமன்னன் விக்ரமாதித்தன் ஆராதித்த ஆதிதேவி இவள். காளியின் ஆட்டம் தொடங்கியது. உஜ்ஜயினியின் ஆற்றிலொன்றில் மிதக்க விட்டான். காளி  காவிரியோடு கைகோர்த்தாள். பெட்டிக்குள் இருந்தவள் காவிரியின் ஒரு துறையில் ஒதுங்கினாள். காவிரியில் குளித்து பக்தியோடு பெட்டியை தூக்கி ஊரின்  தெற்குப் பகுதியில் குடில் அமைத்து பெட்டியை வைத்து வழிபட்டனர். திடீரென்று குடிசை தீப்பற்றி எரிந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதியான மகாபெரியவரை  அணுகினர். ‘‘காளியை உங்க ஊர்ல இருக்கற சுந்தரேஸ்வரர் கோயில்லயே வச்சுடுங்கோ. மாகாளிக்கு தனி இடம் அந்த கோயில்லயே இருக்கு.

போய்பாருங்கோ. அவளும் அங்க இருக்கணும்னு நினைக்கறா. சுந்தரேஸ்வரர் பேரோட காளிய சேர்த்து சுந்தரமாகாளின்னு பிரதிஷ்டை பண்ணுங்கோ. பழைய  பூசை முறைகளை மாத்த வேணாம்’’ என்று ஆசியளித்தார். ஆச்சாரியாரின் அறிவுரைப்படியே அவளை ஈசனின் ஆலயத்திற்குள் தனித்த இடத்தில்  ஸ்தாபித்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இந்த மாகாளி வீதியுலா வருகிறாள். பெட்டியில் இருந்தபடியே பல்லக்கிலேற்றி புறப்பாடு நடக்கும். கொரநாட்டுக்  கருப்பூர் என அழைக்கப்படும் இத்தலம் கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

அம்பகரத்தூர் - பத்ரகாளி

அம்பரன், அம்பன் எனும் இரு அசுர சகோதரர்கள் பேயாக பறந்து கன்னியர்களை பிடித்திழுத்து வந்தனர். எதிப்போரை கொன்றனர். கன்னியர்கள் குவியல்  குவியலாக சகோதரர்களின் காலடியில் கொண்டு வந்து போட்டனர். தேவர்கள் மாகாளியிடம் வேண்டினர். அம்பரன் இறுதியில் காளியான கன்னியின் முன்பு  நின்றான். மெல்ல நெருங்கினான். பூமி பிளப்பதுபோல் ஒரு சத்தம் கேட்டது. கன்னிக் காளி பூமியினின்று நெகுநெகுவென வளர்ந்தாள். சட்டென்று கன்னி மறைந்து  காளியானாள்.

அவர்களை தன் கரங்களால் பிடித்து பூமியில் கிடத்தி இடப்பாதத்தை அவன் மார்பில் உதைத்து திரிசூலத்தால் அவர்களது மார்பை ஓங்கிக் குத்தி இருகூறாகப்  பிளந்தாள். மூவுலகிலும் பத்ரகாளியாக நின்றருளிய தேவியை வணங்கினர். அவளே இத்தலத்தினில் அமர்ந்தாள். கர்ப்பகிரகத்தின் முன்பாக இரண்டு பக்கமும்  அழகிய துவார வதியர் நின்றிருக்க கருவறையில் தென்திசையில் வீற்றிருந்து பத்ரகாளியம்மன் வடதிசை நோக்கி பாரினை பரிபாலித்துக் கொண்டிருக்கிறாள்.  நெடிய தோற்றம் பூண்டிருக்கிறாள். அம்பரனை வதைத்த கோலத்தினூடே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

வலப்பாதம் மடித்து, இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றியபடி திருசூலத்தால் அவன் மார்பைப் பிளப்பதுபோல விளங்குகிறாள். முகம் முழுதும் கோபத்தின்  செம்மை பரவியிருக்கிறது. ஆனால், உற்றுப்பார்த்தால் ஆச்சரியமும், ஆனந்தமும் மிளிர்கின்றன. வதம் செய்தவளின் முகம்போல் அல்லாது கருணை ஊற்றாக  விளங்குகிறாள். தீவினைகளை பொசுக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. அம்பகரத்தூர் எனும் இத்தலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர்  தலத்திற்கு 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

குலசேகரப்பட்டினம்  -முத்தாரம்மன்

இத்தலத்தில் அம்பாள் சிவமயமாகவும் காட்சி தருகிறாள். இதை பரிவர்த்தனை நிலை என்பார்கள். திருச்செந்தூர் பகுதியில் அம்மை நோய் கண்டவர்கள் அம்பாள்  பீடத்தைச் சுற்றிலும் நீர் கட்டுவர். இதனால் முத்து இறங்கி நலம் பெறுவார்கள். இவ்வாறு முத்துக்களை ஆற்றி குணம் பெறுவதால் முத்து ஆற்று அம்மன் என  வழங்கப்படுகிறாள். மேலும், பலர் 48 நாட்கள் விரதமிருந்து வேண்டிக் கொண்டு தரிசிப்பார்கள். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் இத்தலம்  அமைந்துள்ளது.

Related Stories: