மண்டோதரி தச சிரத்தோனின் தர்ம பத்தினி

*காப்பியம் காட்டும் காதாபாத்திரங்கள்

காலையில் எழுந்திருக்கும்போது, அகல்யா, திரௌபதி, தாரா, மண்டோதரி, சீதா எனும் ஐவரின் பெயர்களைச் சொல்லவேண்டும். அல்லது நினைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், பஞ்ச மாபாதகங்களும் நீங்கிப்போய் விடும்  என்பது முன்னோர்கள் வாக்கு.  இந்த ஐவரில் ராவணன் மனைவியான மண்டோதரி இடம் பெற்றிருப்பதைக் கவனிக்க வேண்டும். வாருங்கள்! தலைசிறந்த கற்புக்கரசியான மண்டோதரியைப் பற்றிப் பார்க்கலாம்! ராவணன் மனைவி, மாவீரனான இந்திரஜித்தின் தாய் என்றெல்லாம் புகழப்படும் மண்டோதரி, அசுர சிற்பியான மயனின் மகள்.

அரக்கர்களின் அதிபதியான ராவணனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்று, தன் சகோதரர்களுடன் அரசாண்டு வந்த நேரம். சகோதரியான சூர்ப்பனகைக்குத் திருமணம் முடித்த ராவணன், ஒரு நாள் தனியாக வேட்டையாடப் போனான்.  அப்போது, அழகான பெண் ஒருத்தியுடன் எதிர்ப்பட்ட ஒருவரைக் கண்டான் ராவணன்; “ஐயா! யார் நீங்கள்? ஆள் நடமாட்டமே இல்லாத இக்காட்டில, தன்னந்தனியாக இந்தப் பெண்ணுடன் இக்காட்டில் என்ன வேலை?” எனக்கேட்டான்.  பெண்ணுடன் வந்தவர் சற்றுவிரிவாகவே பதில் சொல்லத் தொடங்கினார்; “அழகு, அறிவு, குணம் ஆகியவைகளில் மிகவும் புகழ்பெற்ற ஹேமை என்ற அப்சரசைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்! அவளைத் தேவதைகள் எனக்கு மனைவியாகக் கொடுத்தார்கள். “ஹேமையும் நானும் பலகாலம் சந்தோஷமாக வாழ்ந்தோம். அவளுக்காக நான், வைடூரியங்களால் இழைக்கப்பட்ட தங்கமயமான ஒரு நகரத்தையே உருவாக்கினேன்.

எங்களுக்குப் பிறந்த பெண்குழந்தை இவள்.

“ஒருசமயம் தேவதைகளுக்கு உதவுவதற்காக, என் மனைவி ஹேமை என்னை

விட்டுப்பிரிந்தாள். இன்னும் திரும்பவில்லை. பதினான்கு ஆண்டுகள் கழிந்துபோய்  

விட்டன. ஏதோ பிணம்போல, நான் அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றேன்.

“இவளை என்மனைவி, கண்ணும் கருத்துமாக காத்து வந்தாள். ஆனால் இப்பாது... இவள் இளமைப்பருவம் அடைந்து விட்டாள். நான் என்ன செய்வேன்? இவளுக்குக் கல்யாண காலம் நெருங்கி விட்டது. இவளுக்கு ஏற்ற கணவனைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

  “பெண்ணைப் பெற்றவர்களின் நிலை, சொல்ல முடியுமா என்ன? பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும், அவமானம் வராமல் அவள் காக்கவேண்டுமே என்று, பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்ளாத குறையாக இருக்கிறார்கள்.

“இவளைத்தவிர, மாயாவி - துந்துபி என்று இரண்டு பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள் எனக்கு. நீங்கள் கேட்டபடி , என்னைப்பற்றிய தகவல்களையெல்லாம் சொல்லி விட்டேன். நீங்கள் யார்?”

எனக்கேட்டார் வந்தவர். அசுரகுல சிற்பியான அவர் பெயர் - மயன். மயனின் வார்த்தைகளைக் கேட்ட ராவணன், தன்னைப்பற்றிச்சொல்லத் தொடங்கினான்.

“பிரம்மாவின் மகனான புலத்தியரின் மகன் விச்ரவஸ் மகரிஷி. அந்த விச்ரவஸ் மகரிஷியின் இரண்டாவது பிள்ளை நான்; தசக்கிரீவன் என்று பெயர். ராட்சசர்களுக்கு அதிபதியான நான், இலங்கையில் ஆட்சி செய்து வருகிறேன்” என்றான்.

 

தன்னுடன் பேசிக்கொண்டு இருப்பது விச்ரவஸ் மகரிஷியின் பிள்ளை என்பதை அறிந்ததும், மயனுக்கு மகிழ்ச்சி உண்டானது. தன் பெண்ணைக் கொடுக்கத் தீர்மானித்தார். தீர்மானித்த அவர், உடனே தன் மகளின் கையைப்பிடித்து ராவணனின் கைகளில் ஒப்படைத்தார்.

“ராட்சஸர்களின் தலைவனே! எனக்கும் ஹேமைக்கும் பிறந்த இப்பெண்ணை உங்களுக்குப் பத்தினியாக அளிக்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்! இவள் பெயர் மண்டோதரி “ என்றார் மயன்.

 அவர் சொன்னதை ஏற்றான் ராவணன். அங்கேயே அக்கினியை வளர்த்து, மண்டோதரியை மணம் செய்து கொண்டான். மயன் அத்துடன் நிறுத்தவில்லை. பலகாலம் தவம்செய்து, தான்பெற்ற சக்தி ஆயுதத்தையும் ராவணனுக்குக் கொடுத்தார் மயன். இந்த ஆயுதத்தைத்தான் இலக்குவன் மீது ஏவினான் ராவணன்.

        

‘‘தாரமும் குருவும் தலைவிதிப் படியே’

என்பார்கள். உத்தமமான மண்டோதரி, தனக்கு மனைவியாக வாய்க்க ராவணன் பெரும் புண்ணியம் செய்திருந்தான் போலும்! மண்டோதரியின் பெருமையை, இனி ஆஞ்சநேயர் வாயிலாகக் காண்போம்.

     

சீதாதேவியைத் தேடிக்கொண்டு இலங்கைசென்ற ஆஞ்சநேயர், அங்கே இரவு நேரத்தில் தேடும்போது, மனம் மயக்கும் மாளிகையில் மணம் வீசும் மஞ்சத்தில் மண்டோதரியைக் கண்டார் மாருதி. மண்டோதரி தூங்கிக் கொண்டிருக்க, அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலான தேவலோகப்பெண்கள் பலரும் மண்டோதரிக்குக் கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார்கள். மண்டோதரியின் தூய உள்ளம், உறங்கும் போதும் அவள் முகத்தில் தெரிந்தது.

அவளுடைய ஆர்ப்பரிப்பு இல்லாத தோற்றம் கண்டு, “ஆகா! இவள்தான் சீதை! சீதையைக் கண்டு விட்டேன்! சீதையைக்கண்டு விட்டேன்!”என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அருகிலிருந்த தூணில் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்குதித்தார். வாலை எடுத்து முத்தம் கொடுத்தார். ஆம்! நவ வியாகரண பண்டிதரும் மகாமேதாவியுமான ஆஞ்சநேயரே, மண்டோதரியைக்கண்டு சீதையெனக் கருதி விட்டார் என்றால், மண்டோதரியின் பெருமைக்கு வேறு சான்று வேண்டுமா என்ன? ஒருசில விநாடிகளில், தான் கண்டது சீதையல்ல என்பதை உணர்ந்து கொண்டார் மாருதி. இருந்தும், அந்நிலையிலும் ஆஞ்சநேயர் சந்தேக வசப்பட்டார்;

 

‘‘மானுயர்ந்தத் திருவடிவினள் அவள் - இவள்

மாறு கொண்டனள் கூறில் தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்’’

(கம்ப ராமாயணம்-சுந்தர காண்டம்)

        

 சுந்தர காண்டத்தில், ஆஞ்சநேயராலேயே சீதையாகக் கருதப்பட்ட மண்டோதரியின் சொல் பலிதம் என்பது, இந்திரஜித் இறந்ததும் அவன் உடலைக்கண்டு அழும்போது வெளிப்படுகின்றது. போர்க்களத்தில் இந்திரஜித் இறந்த தகவல் தெரிந்ததும், ஓடுகிறாள் மண்டோதரி. இந்திரஜித்தின் பெரு

வீரத்தையும் சொல்லிச் சொல்லி அழுதவள்,

“அஞ்சினேன் அஞ்சினேன்

அச்சீதை என்ற அமிழ்தால் செய்த

நஞ்சினால் இலங்கை வேந்தன்

நாளை இத்தகையனன்றோ?”

என்று சொல்லி அழுகிறாள்.

“மாற்றான் மனைவியான சீதையையைக் கவர்ந்து கொண்டு வந்து சிறை வைத்ததன் விளைவல்லவா இது? இதுமட்டுமா? இலங்கை வேந்தனான ராவணனும் நாளை,இதேபோல இறந்து போவானே!”என்று துடிக்கிறாள் மண்டோதரி.

‘அமிர்தத்தால் செய்த நஞ்சு’ எனச்சொல்லி இருப்பது ஆழ்ந்து நோக்க வேண்டியது. தவறான செயல்கள் மகிழ்வை ஊட்டும். நஞ்சைப் போலக் கருத வேண்டிய அவை, அமிர்தம் போல அந்த நேரத்தில் மகிழ்வை ஊட்டும். அதற்காக அதிலேயே ஈடுபட்டிருந்தால், விபரீத முடிவுதான். சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து சிறை வைத்தது, மாபெரும் தவறு என்று, மாலியவான்- கும்பகர்ணன், விபீஷணன், இந்திரஜித் என்று பலர் அறிவுரை சொல்லியும் ராவணன் அதைக் கேட்கவில்லை. கணவரின் இந்த நிலை கண்டு, இந்திரஜித்தை இழந்த நிலையிலும், “இதே போல ராவணனும் நாளை இறந்து போவானே!” என்று சொல்லி அழுத அந்த உத்தமியின் வாக்கு அப்படியே பலித்தது. ஆம்! ராவணன் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்ததைக்  கண்ட மண்டோதரி, கணவரின் உடலைக்கண்டு பலவிதமாகவும் புலம்பி அழுதாள். அப்போது மண்டோதரியின் மனம், அப்படியே வெளிப்பட்டது.

பி.என் பரசுராமன்

Related Stories: