கண் நோய்களை போக்குவாள் முண்டகக்கண்ணி

மயிலாப்பூர், சென்னை

Advertising
Advertising

முண்டகம் என்றால் தாமரை. தாமரை போன்ற கண்களை உடைய தேவி எனும் பொருள்படும்படி முண்டகக் கண்ணி எனப் பெயர் கொண்டு தேவி திருவருள் புரிகிறாள். தலவிருட்சமாக பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலமரம் விளங்குகிறது. ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் ஈசனுக்கு நடக்கும் அன்னாபிஷேக வைபவம் இத்தலத்தில் அம்பிகைக்கு நடப்பது தனிச் சிறப்பு. அம்பிகை சுயம்பு வடிவில் அருளும் கோயில் இது. காலை 6 மணியிலிருந்து 11.30 மணிவரை அபிஷேகத்தின்போது மட்டுமே இந்த சுயம்பு வடிவை தரிசனம் செய்ய முடியும்.

சுயம்புவின் நடுவில் அம்பிகையின் அம்சமான சூல வடிவம் இருப்பது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இந்த அம்பிகைக்கு பொங்கல் வைக்க, பசும் சாணத்தாலான வறட்டியில் தீயிட்டுப் பயன்படுத்துகின்றனர். பின் அந்த சாம்பல் திருநீறு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருவறையில் அம்மனுக்கு சமர்ப்பித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தம் ஆகியவை பிரதான பிரசாதங்கள். கருவறை சந்நதியின் முகப்பில் சப்த மாதர்களும் தத்தமது வாகனங்களுடன் வண்ணச் சுதை வடிவில் அருட்காட்சியளிக்கின்றனர்.ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை 1008 மலர்க்கூடை அபிஷேகம் இங்கே நடைபெறுகிறது. நவராத்திரி ஒன்பதாவது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், முண்டகக்கண்ணியம்மன்  திருவீதிஉலா செல்வது வழக்கம்.

திருமணத் தடைகள் விலகவும், கண் நோய்கள் நீங்கவும் இந்த அன்னை அருள் புரிகிறாள். கல்வியில் சிறக்க இறைவியின் சந்நதியில் 23 விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.இந்த அம்பிகை மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குவதாக ஐதீகம்.கருவறையின் பின்னால் உள்ள மரத்தில் நாகப் புற்றும் நாகதேவதை சந்நதியும் உள்ளன. பிராகாரத்தில், வசந்த மண்டபத்தில்  உற்சவ அம்பிகை சிம்மாசனத்தில் அமர்ந்து அருட்பாலிக்கிறாள். பிராகார வலம் வரும்போது சப்த கன்னியரும் லிங்க வடிவில் அருள அவர்களுக்கு இருபுறங்களிலும் ஜமதக்னி முனிவரையும் பரசுராமரையும் தரிசிக்கலாம்.

பிரார்த்தனையாக வேப்பஞ்சேலை அணிந்து சந்நதியை வலம் வருதல், தங்கரதம் இழுத்தல் போன்றவை இங்கே பரிகாரமாக நேர்ந்து கொள்ளப்படுகின்றன. மேற்கூரை ஓலைகளால் வேயப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை ஓலைகளை மாற்றுகின்றனர். கூரையை நாகம் ஒன்று காவல் காப்பதாக ஐதீகம். எதிரிகளிடமிருந்து ஊரைக் காப்பதற்காக ஒரு இளம்பெண் கிணற்றில் இறங்கி அப்படியே ஜலசமாதி கொண்டதாகவும் அந்தப் பெண்ணே முண்டகக் கண்ணியாக அருட்பாலிப்பதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. சென்னை மயிலாப்பூரில், கச்சேரி சாலையில், காவல் நிலையம் அருகே உள்ளது முண்டகக்கண்ணியம்மன் கோயில்.

Related Stories: