திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு

இலுப்பூர்: இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி  நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திருநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி  காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் அம்மனுக்கு தினமும் காலை மாலை சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்று வந்தன.

விழாக்காலங்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நாட்களில் இரவு பூசாரி அருள் வாக்கு கூறுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. விழாவின் முக்கிய விழாவான திருவிழா நேற்று நடைபெற்றுது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு வைத்தும் அம்மனை வழிபட்டனர். நேற்று பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், கரும்பு தொட்டில் எடுத்தும், புரவி எடுத்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில் திருநல்லூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், மண்டகாப்படிகாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: