தங்கமான வாழ்வருளும் சிங்கவேள் குன்ற நரசிம்மர்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம் - 6

பகவான் விஷ்ணுவின் அவதாரமாக நரசிம்ம ஸ்வாமியின் பக்தி மார்க்கம் பாரதநாடு முழுவதும் விசேஷமாகப் பரவியுள்ளது. அதிலும் ஆந்திர மாநிலத்தின் சரித்திரத்தில் இந்த பக்தி மார்க்கம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் சுமார் முந்நூறு திருத்தலங்களில் நரசிம்ம ஸ்வாமி  எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இத்தலங்களில் எல்லா நாளும் நிவேதனம் நடைபெற்று வருகின்றது.

நரசிம்ம ஸ்வாமியின் பக்தி மார்க்கத்தின் ஐதீகங்கள் இன்றளவும் அஹோபிலம், யாதகிரிகுட்டா, மங்களகிரி, சிம்ஹாசலம் போன்ற திருத்தலங்களில் பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றது. கர்னூல் முதல் சித்தூர் ஜில்லா வரை இருக்கும் ‘நல்லமலை மலைகள்’ என்பவை பகவான் ஆதிசேஷனாகக் கருதப்பட்டு அவருடைய தலை திருப்பதியிலும், உடல் அஹோபிலத்திலும், வால்பகுதி ஸ்ரீசைலத்திலும் முடிவடைவதாகப் புராணத்தின் அடிப்படையில் பார்க்கலாம். மூன்றுமே மகாசக்தி வாய்ந்த தெய்வத் திருத்தலங்களாக பக்தகோடிகளால் கொண்டாடப்படுகிறது.

சிம்ஹாசலம் க்ஷேத்ர மஹாத்மிய கூற்றுப்படி, ‘பூமியில் இருக்கும் நான்கு புண்ணியத் திருத்தலங்களில் அஹோபிலமும் ஒன்று’ என்றாகின்றது. ஆழ்வாராதியர்களில் திருமங்கையாழ்வார் ஒருவரே மங்களாசாஸனம் செய்தருளிய சிங்கவேள் குன்றம் திருத்தலத்தில், பகவான் தானே பாறைக் குகையில் வெளிப்படுத்தி எழுந்தருளியதால் (ஸ்வயம்பு), இத்திருத்தலம் நூற்றியெட்டு திவ்விய தேசங்களில் ஒன்றாகி உயர்வானது.

இந்த கீழ் அஹோபிலத்தை ‘சின்ன அஹோபிலம்’ மற்றும், திகுவ திருப்பதி’ என்றும்; மேல் அஹோபிலத்தை ‘எகுவ திருப்பதி’ மற்றும், ‘பெத்த அஹோபிலம்’ என்றும் அழைக்கின்றனர். கீழ் அஹோபிலம் ஒரு சிறிய கிராமமாகக் காட்சியளிக்கிறது. இங்கே அஹோபில மடமும் லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியின் திருக்கோயிலும் இருக்கின்றன. இத்திருக்கோயில் மூன்று பிராகாரங்களாக சூழ்ந்துள்ளது. லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி  ‘பிரகலாதவரதன்’ என்று ேபாற்றப்படுகிறார். நரசிம்ம ஸ்வாமி பிரகலாதனை ஆசிர்வதிக்கின்ற திருக்காட்சி தெய்வாம்சம் பெற்றுத் திகழ்கின்றது.

விஜயநகர சிற்பக்கலையால் உருவான இத்திருக்கோயிலில் அநேக மண்டபங்கள் உள்ளன. அந்த மண்டபத் தூண்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ந்ருநரசிம்ம ஸ்வாமி  அவதார மகிமையை அழகாகவும் அற்புத  தத்துவமாகவும், மாபெரும் கலைப் பொக்கிஷமாகவும்  மனதை நெகிழ வைக்கின்றன. திருக்கோயிலுள் லக்ஷ்மீ நரசிம்ம ஸ்வாமி கிழக்கு முகமாக எழுந்தருளியிருக்க, அவரது இடதுபுறமாக ‘பாவன நரசிம்ம’ உற்சவ மூர்த்தி சேவை சாதிக்கிறார்.

இந்த ஸ்வாமிகளுக்கு முன்புறம் தனியொரு பீடத்தில் உற்சவமூர்த்தியான ‘பிரகலாதவரதன்’ தன் தேவிகளுடன் தெய்வாம்சம்  பொலிய, பத்து கரங்களுடன்கூடிய ஜ்வால ஸ்ரீநரசிம்ம மூர்த்தியாக ஸ்ரீதேவி-பூதேவியுடன் திருவருள் சாதிக்கிறார். திருப்பதிக்கும் ஸ்ரீசைலத்துக்கும் இல்லாத கூடுதல் பெருமை அஹோபிலத்துக்கு உண்டு. திருப்பதி ஸ்ரீனிவாசர் பத்மாவதி தாயாரின் திருமண விருந்து தயாரானவுடன் கடவுளுக்கு நிவேதிக்க வேண்டும். சாட்சாத் திருமாலான தாங்களே மணமகனாக இங்கு வீற்றுள்ளீர்கள்.

இந்த திருமண விருந்தை யாருக்கு நிவேதிப்பது?என தலைமை சமையற்காரர் பெருமாளிடம் கேட்க, அஹோபிலம் நரசிம்மரை நினைத்து அவர் இருக்கும் திக்கை நோக்கி இந்தத் திருமண விருந்தை நிவேதியுங்கள் என பெருமாள் திருவாய் மலர்ந்தருளினாராம். ஸ்ரீனிவாசரே ஆராதித்த பெருமாளாதலால் இவர் பெரிய பெருமாள் என போற்றப்படுகிறார்,அவ்வளவு மகிமை வாய்ந்த இந்த அஹோபிலத்தின் நவநரசிம்மர்களை உண்மையான பக்தியும் நரசிம்மரின்திருவருளும் இருந்தால் மட்டுமே தரிசித்துப்  பரவசம் கொள்ளமுடியும் !

நாராயணனின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்டது நரசிம்ம அவதாரம். ராமாவதாரம். கிருஷ்ணாவதாரம் போலல்லாமல்.இது கண- நேரத்தில் அவதரிக்கப்பட்ட அவதாரம். அதேபோல் மற்ற அவதாரங்களை விடக்குறைவான நேரமே இந்த அவதாரம் பூமியில் நிலைத்திருந்தது. உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக்குரலுக்காகவும் எடுக்கப்பட்ட மற்ற அவதாரங்கள் போலில்லாமல் இந்த அவதாரம் ஒரு தனி நபருக்காக, உண்மையான பக்திக்குப் பரிசாக எடுக்கப்பட்ட அவதாரம். தெய்வம், பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு புள்ளியிலும் வியாபித்திருக்கிறது என்பதைத் தெளிவாக நிலைநாட்ட நாராயணன் மேற்கொண்ட திரு அவதாரம், மனிதனாவும் அல்லாமல், மிருகமாகவும் அல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட தோற்றத்துடன் மகா உக்கிரமாக வெளிப்பட்ட அவதாரம்.

எந்தத் தோற்றம் ஹிரண்யாகசிபுவின் இதயத்தில் மாபெரும் அச்சத்தை உண்டுபண்ணியதோ, அதே தோற்றம்தான் பிரகலாதனுக்கு மிக்க கருணை வடிவாகக் காட்சியளித்தது. எந்த விழிகள் அசுரனை அழித்ததோ அந்த விழிகள்தான் தன் பக்தனுக்குக் கருணையைக் குறைவு இல்லாமல் பொழிந்தன, எந்த மடியும், தொடைகளும் அக்கிரமக்காரனின் பலிபீடமாக மாறினதோ அதே மடியும் தொடையும்தான் அருள் புரியும் அன்னை லட்சுமியுடன் பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கிறது. அப்பேர்ப்பட்ட நரசிம்மர் அவதரித்த திருத்தலம் அஹோபிலம். கருடன் வணங்கியதால் இம்மலைத் தொடர் ‘கருடாச்சலம்’ என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.

எந்த ஆயுதமும் இல்லாமல் விரல்களாலேயே ஹிரண்யனைக் கிழித்து சம்ஹாரம் செய்த நரசிம்மனின் பலம் கண்டு வியந்த தேவர்கள். ‘ஆஹா, என்ன பலம்! என்று ஆர்ப்பரித்தால் ‘அஹோபிலம்’ என்றழைக்கப்படுகிறது. அழகான தமிழில் அஹோபிலத்தை ‘சிங்க வேள் குன்றம் என்றழைக்கிறார். உண்மையான பக்தி இருந்தால் வந்து தரிசிக்கட்டும் என்று வனமும் விலங்குகளும் அடர்ந்த குகைகளில் நாராயணன் தன்னை வெளிப்படுத்திய புண்ணியத் தலம் அஹோபிலம். மேல் அஹோபிலம் - கீழ்- அஹோபிலம் என்று இரண்டு தலங்களாக அஹோபிலம் அமைந்திருக்கிறது. உக்ர ரூபமாக மட்டுமே அறியப்பட்ட நரசிம்மர் தன் மற்ற தோற்றங்களையும் சேர்த்து ஒன்பது நரசிம்மர்களாக எழுந்தருளியிருப்பது மேல அஹோபிலத்தில் மட்டும்தான். பிரகலாதனின் பிரசித்திபெற்ற சரித்திரம் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஹிரண்யனை அழித்த உக்ர நரசிம்மரைப் பற்றியும் தெரியும். மற்ற நரசிம்மர்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள அஹோபில யாத்திரை நமக்கு துணைபுரிகிறது.

 கிழக்கு தொடர்ச்சி மலைகளில் நல்ல மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது. அஹோபிலம், இருள் அடர்ந்து கருமையான கானமாக இருந்ததால் ‘‘நல்ல’’ (தெலுங்கில் கறுப்பு என்று பொருள்) மலை என்று பெயர் பெற்றது. கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதரின் ஆலயம் அமைந்துள்ளது.   மேல் அஹோபிலத்தில் மலைச்சாரலின் மடிப்புகளில், மறைவான குகைப் பகுதிகளில் மகத்துவம் மிக்க நவநரசிம்மர்கள் அருட்பாலிக்கிறார்கள். பேருந்துகளோ, தனியார் வாகனங்களோ, மேல் அஹோபிலத்தின் குறிப்பிட்ட பகுதிவரை கொண்டுவிடத் தயாராயிருக்கின்றன. அதன் பின் ஆண்டவன் கொடுத்த கால்களே நம்மை நகர்த்தும் சக்கரங்கள்.

 கிருதயுகத்தில் இப்பகுதியில் ஹிரண்யனின் அரண்மனை அமைந்திருந்தது. பிரகலாதனின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து, ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனை மண்டபத்தில் ஒரு தூணை உதைத்துப் பிளந்து நரசிம்மராக நாராயணன் வெளிப்பட்டதும், அரசுரனை அள்ளி எடுத்து மடியில் கிடத்தி நகங்களால் கிழித்து வதம் புரிந்ததும் இங்குதான். மூங்கில் கோல் உதவியுடன் மேல் அகோபிலம் தரிசனம் செய்ய செல்லவேண்டும். பாதங்களை அழுத்தப் பொருத்து மலைச்சரிவில் (8) கி.மீ.ஏறியதும் பரந்த ஆகாயத்தின் நீலப் பின்னனியில் எதிரே பிரமாண்டமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது உக்ரஸ்தம்பம். இங்கே மலைப்பாறை இரண்டாகப் பிளந்து இரு வெவ்வேறு பகுதிகளாக நிற்பதைக் காணலாம்.  உற்றுப் பார்த்தால், பாறைப் பிளவின் அமைப்பில் நரசிம்மரின் திருமுகத்தோற்றத்தை உருவகப்படுத்திக் கொள்ள இயலுகிறது.

   ஹிரண்யனின் அரண்மனையில் இருந்த இந்தத் தூணை நாராயணன் இரண்டாகப் பிளந்துதான் நரசிம்மராக வெளிவந்தார். அந்தக் கணத்தில் இந்தப் பிரதேசம் எப்படி பூகம்பமாக நடுக்கம் கண்டிருக்கும் என்பதை இன்றைக்கும் உணர முடிகிறது. மலையின்  இந்தப் பகுதியைக் கவனமாகப் பார்த்தால், ஹிரண்யனின் அரண்மனை மண்டபமாக இருந்திருக்கலாம் என்று தோற்றமளிக்கும் இயற்கை அமைப்பு உக்ரஸ்தம்பத்தின் உச்சிக்குப் போய் வருவது என்பது பிரம்மப்பிரயத்தனம். அப்படி போனவர்கள் நட்டு வைத்த காவிக்கொடி அந்த உச்சியிலிருந்து காற்றில் அசைந்தாடி அவர்களை நினைவு கூர்கிறது.

ஹிரண்ய சம்ஹாரம் முடிந்தவுடன் பிரஹலாதனை அழைத்த நரசிம்மர் அவனைக் கடிந்து கொண்டாராம். எதற்காக என்னிடம் சினம் கொள்கிறாய் நரசிம்மா? என்ற பிரஹலாதனிடம் உன் தந்தை இந்தத் தூணில் இருக்கிறானா உன் ஹரி என்றதற்கு தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று கூறிவிட்டாய். உன் தந்தை எந்தத் தூணைப்பிளப்பான்? எந்தத் துரும்பில் என்னைக்காண்பான்? என ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருந்தேன்? உன் வாக்கு பொய்க்கக்கூடாது என்பதற்காக ஒரு நொடி நான் துன்பப்பட்டேன். அதற்காகத்தான் உன்னைக்கடிந்து கொண்டேன் என்றாராம். என்னே நரஹரியின் கருணை!

இனி நவ நரசிம்மர்களைப் பற்றி அறிவோம்.

1. பார்கவ நரசிம்மர். ரிய தோஷம் போக்கும் சந்நதி.

வேதாத்ரி பர்வதத்தின் கீழ் அஹோபில ஆலயத்திலிருந்து சுமார்  இரண்டு கிலோ மீட்டர் தொலைவுப் பயணம். நல்லமலைக்காடுகளில் அடர்ந்த குன்றத்தின் மீது உயரத்தில் அமைந்திருக்கும் ஆலயம் சற்றுத் தொலைவிலிருந்தே பார்வையில் தட்டுப்படுகிறது. காவியும், வெள்ளையும் அடித்த செங்குத்தான 127 படிகள் வரவேற்கின்றன. படியேறும் முன், ஆலயத்தின் பக்கவாட்டில் சதுர வடிவில் ஒரு திருக்குளம் அமைந்திருக்கிறது. பார்கவ தீர்த்தம் என்று வழங்கப்பெறும் இந்தக் தடாகத்தில் நீர் வற்றியதே இல்லை. இதனால் இதற்கு ‘‘அட்சய தீர்த்தம்’’ என்று ஒரு பெயரும் தடாகத்தின் பாசி படிந்த நீரில் ஆலயத்தின் பிரதிபலிப்பு மிதக்கிறது.

பார்கவ தீர்த்தம் என்ற பெயர் எப்படி வந்தது? பார்கவ ராமர் என்று அறியப்பட்ட பரசுராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது நரசிம்மரைத் தரிசிக்க இந்தத் தலத்துக்கு வந்திருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க, நாராயணன் தன் தசாவதாரத் தோற்றங்களையும் ஒரு சேர இந்தத் தலத்தில் வடக்கு முகமாக அவருக்குக் காட்சியளித்தார். மேலும் ப்ருகு முனிவரால் வழிபடப்பட்டதாலும் பார்க்கவ நரசிம்மர் என பெயர் பெற்றார்.

எளிமையான ஆலய அமைப்பு. நரசிம்மர் இங்கே ஹிரண்ய வதத்தோற்றத்தில், மடியில் அசுரனைக் கிடத்தி, காணப்படுகிறார். ஹிரண்யனின் வலது கையில் உயர்த்திய வாள் அப்படியே உறைந்திருப்பது. சுவாமியின் பாதத்திற்கருகே, பிரஹலாதன் வணங்கிய நிலையில் நிற்கிறார். பரசுராமருக்கு காட்டிய பத்து அவதாரங்களும் சிற்பத்தின் தோரணத்தில் பதிவாகி இருக்கின்றன. சந்நதிக்கு வெளியில், மகாவிஷ்ணுவின் விக்கிரம் ஒன்றும் நிறுவப்பட்டிருக்கிறது.

வடக்கேபார்த்தவாறு அமர்ந்துள்ள இவரை வணங்கினால் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் தொலையும். சகல பாவங்களும் தீர்ந்து நிம்மதி உண்டாகும். கற்பனைத்திறன், எழுத்தாற்றல், கவிதை, குடும்பத்தில் மகிழ்ச்சி, கவலைகள் இல்லாத மனம், நோயற்ற நல்வாழ்வு, வெளிநாடு சென்று செல்வம் சேர்த்தல் ஆகிய பாக்கியங்களை அளித்தருளும் கருணாமுர்த்தி இந்த நரசிம்மர்.

2. காரஞ்ச நரசிம்மர். சந்திரதோஷம் போக்கும் சந்நதி.

கருடாத்ரி மலைத்தொடரின் மேற்குப்புறம் அமைந்திருக்கிறது ‘காரஞ்ச நரசிம்மர்’ ஆலயம், மேல் அஹோபிலத்துக்கு வாகனங்கள் வரும் சாலை வழியில், மரங்களின் நிழலில் ரம்யமாகக் காட்சியளிக்கிறது. இவ்வாலயத்தில் நுழைந்ததும் முகப்பில் மண்டபம், இங்குள்ள தூண்களில் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள். மண்டபத்தின் இடதுபுறம் ஆஞ்சநேயரின் சந்நதி, ஆஞ்சநேயர், நரசிம்மரின் சந்நதி நோக்கி வணங்கியபடி நின்றிருக்கிறார்.

மற்ற எந்த நரசிம்மரிடமும் காணமுடியாத வில், ஆயுதம் தரித்து இங்கே நரசிம்மர் எழுந்தருளியிருப்பது அற்புதம். இந்தத் திருக்கோலம் ஸ்ரீஆஞ்சநேயருக்கு தரிசனமளித்த சிறப்புத் திருக்கோலம். ஸ்ரீ ஆஞ்சநேயர் காரஞ்ச விருக்ஷத்தின் (கருங்காலி மரம்) கீழே ராமரை நோக்கித் தவமிருந்தார். நாராயணன் அவருடன் விளையாட விரும்பினார். வெகுகாலம் தவமிருந்தவரின் முன்னே, அழகியசிங்கராக நரசிம்மர் பிரத்யட்சமானார். ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருப்தி இல்லை. நான் வேண்டியது ஸ்ரீ ராமனின் தரிசனத்தையல்லவா? சிங்கமுகத்துடன் உள்ள தாங்கள் யார் ? என்று கேட்டார்.

‘‘இது நரசிம்மக்ஷேத்திரம், இங்கு என்னைத்தான் தரிசிக்க முடியும். நானும் ராமனும் ஒன்று!’’ என்று விளக்கம் தந்தார் பரந்தாமன். ஸ்ரீஆஞ்சநேயர் ஒப்புக்கொள்வதாக இல்லை. என் ஸ்ரீராமன் பேரழகன், இப்படிக் கொடிய ஆயுதங்களாக நீண்ட நகங்களைக் கொண்டிருக்க மாட்டான். தன் தோற்றத்துக்கே அழகு சேர்க்கும்  நாணேற்றிய வில்லைத்தான் தரித்திருப்பான். என் ராமனையே நான் காண விழைகிறேன்....’’

‘ஸ்ரீஆஞ்சநேயா.... ராமனின் பால் உனக்கிருக்கும் மாறாத பக்தியை மெச்சினோம். நரசிம்மரும் நானே. ஸ்ரீ ராமனும் நானே! இரண்டு அவதாரங்களாக வெளிப்படுத்திக் கொண்ட நாராயணனும் நானே!  நன்றாகக் கவனி......’’ ‘‘ஸ்ரீஆஞ்சநேயரின் மனத்திருப்திக்காக, ஸ்ரீ ராமனைப் போல வில்லை ஆயுதமாகத் தரித்து இந்த க்ஷேத்திர நாயகன் நரசிம்மர் சிறப்பு தரிசனம் தந்தார்.’’  ஸ்ரீஆஞ்சநேயருக்கு விளக்க. நாராயணனுக்குரிய ஆதிசேஷனே படமெடுத்துக் குடை பிடிக்க அதன் நிழலில் வலது கையில் சக்கரத்தையும் இடது கையில் வில்லையும் தரித்து நரசிம்மர் காட்சியளித்தார்.

இந்த வித்தியாசமான திருக்கோலத்தில், இந்த ஆலயத்தில் இங்கு காரஞ்ச நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இந்த நரசிம்மரை அகோபில முனிவர் இவரை தரிசித்துப் பேறு பெற்றார். மலைப்பாதையில் இறங்கி வருகையில், பழமையான நூற்றுக்கால் மண்டபம் கவனத்தை ஈர்க்கிறது. கரடு முரடான மலைப்பாறைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இம்மண்டபம் சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரசித்தி பெற்றிருந்தது. இவரை வழிபட ஞானம் கிட்டும்.

3. ஜ்வாலா நரசிம்மர். செவ்வாய் தோஷம் போக்கும் சந்நதி.

தூணைப் பிளந்து வெளிப்பட்ட நரசிம்மர் ஹிரண்யனை எந்த இடத்தில் வைத்து சம்ஹாரம் செய்தாரோ? அந்த இடத்தில்தான் ஜ்வாலா நரசிம்மரின் சந்நதி அசலச்யா மேரு பர்வதத்தின் நடுவில் அமைந்திருக்கிறது. நரசிம்மரின் ஆவேசம் காரணமாக இந்தக் குகை வெகுகாலம் நெருப்பு போல் கனன்று கொண்டிருந்தது. பச்சைப் புல்லைக் காட்டினால் கூட உடனே பற்றிக் கொள்ளும் அதனால் தான் நரசிம்மருக்கு ‘‘ஜ்வாலா நரசிம்மர்’’ என்று பெயர் வந்தது. ஹிரண்ய வதம் சிற்பத்தின் வலதுபுறம் அவதாரத் தருணம். நாராயணன் சங்கு சக்ரதாரியாக, தூணைப் பிளந்து நரசிம்மராக வெளிப்படும் தோற்றம்.

இடது புறத்தில் நரசிம்மருக்கும் ஹிரண்யனுக்குமான போர்க்கோலம். குகை ஆலயத்துக்குச் சற்றுத் தள்ளி பாறைகளின் இடுக்கில் அமைந்திருக்கிறது. ரத்தகுண்டம். இங்குதான் நரசிம்மர் தன் ரத்தக்கறை கொண்ட கரங்களைக் கழுவிக்கொண்டார். அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ரத்த குண்டம் என்று பெயர். இயற்கையில்  அமைந்திருக்கும் இந்தச் சுனையில், நீரின் பிரதிபலிப்பு சிவப்பாக இருப்பதை இன்றைக்கும் காணலாம்.

ந.பரணிகுமார்

(அஹோபில தரிசனம் தொடரும்)

Related Stories: