விலங்குகளுக்கும் மனிதர்களைப் போல் இறை பக்தி உண்டா?

உண்டு என்பதையே நம் புராணங்கள் அறுதியிட்டுச் சொல்கின்றன. திருவானைக்காவல், திருக்கோகர்ணம் முதலான ஆலயங்களின் ஸ்தல புராணம் விலங்குகளின் பக்தியை நமக்குச் சொல்கிறது. யானை மற்றும் சிலந்தி பூஜித்த கதையை திருவானைக்காவல் ஸ்தலத்திலும், பசு பால் சொரிந்து சிவபூஜை செய்த கதையை திருக்கோகர்ணம் ஸ்தலத்திலும் அறிந்து கொள்ள முடியும். இவையிரண்டும் உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டவையே.

Advertising
Advertising

விலங்குகளால் பூஜை செய்யப்பட்ட ஸ்தலங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. இதுபோன்ற புராணக்கதைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் உண்டு. ராஜஸ்தானில் உள்ள ஒரு இடத்தில் எலிகளால் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் ஆலயம் மிகவும்  பிரபலம். இந்த வரிசையில் குரங்கு, பாம்பு, நாய், மான், புலி, கரடி என்று பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் உள்ளன என்று தவறாக எண்ண வேண்டாம். நம்மை விட இதுபோன்ற புராணக்கதைகள் எகிப்து நாட்டில் ஏராளம். அங்கு பன்றிகள் வழிபாடு செய்த புண்ணிய பூமி கூட உண்டு.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளும்போது விலங்குகளுக்குள்ளும் பரமாத்மா என்ற இறைசக்தி நிச்சயமாக இருக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இவை எல்லாவற்றையும் விட அன்பு இருக்கும் இடத்தில் நிச்சயமாக ஆண்டவன் இருப்பான். அன்பே சிவம் என்ற தத்துவம் அதனை அறுதியிட்டுச் சொல்லும். பூனை, நாய், பசு, காளை என்ற வளர்ப்புப் பிராணிகள் மட்டுமல்ல, காகம், புறா, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்ல, யானை, புலி, சிங்கம் முதலான வனவிலங்குகள் மட்டுமல்ல, தொட்டியில் வளர்க்கப்படும் மீன் இனங்களுக்குக் கூட தனது எஜமானனின் மேல் அன்பு செலுத்தத் தெரியும் என்பதை அவற்றை வளர்ப்பவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். அன்பு என்பதே கடவுளின் உருவம் என்பதாலும், விலங்குகளுக்கும் அன்பு செலுத்தத் தெரியும் என்பதாலும், விலங்குகளுக்கும் இறைபக்தி என்பது நிச்சயம் உண்டு என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நான் வெளிமாநிலத்தில் தங்கி வேலை செய்து வருகிறேன். வேலை முடிந்து வரும்பொழுது இரவு எட்டு மணி ஆகிவிடும். அமாவாசை, பௌர்ணமி போன்ற விரத நாட்களிலும் கடையில்தான் சாப்பிடுகிறேன். விரதம் இருக்கும் நாளில் வீட்டில் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும் அல்லவா? பலகாரம் மற்றும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாமா? - விஜயாசெல்வம், கேரளா.

இருக்கலாம். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்குச் செல்பவர் எனும் பட்சத்தில் முன்னுரிமையை செய்யும் தொழிலிற்குத்தான் அளிக்க வேண்டும். வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதத்தினை கடைபிடித்தால் செய்கின்ற வேலைக்கு உங்கள் உடல் ஒத்துழைக்குமா என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில் நீங்கள் வெறும் பால் மற்றும் பழங்களைச் சாப்பிட்டு விரதத்தினை கடைபிடிக்கலாம். இயலாத பட்சத்தில் முடிந்தவரை அசைவம், மற்றும் வெங்காயம், பூண்டு, முருங்கை, முள்ளங்கி ஆகியவை கலந்த உணவுகளை தவிர்த்து மற்ற உணவுகளை உட்கொண்டு விரதத்தினை கடைபிடிக்கலாம்.

விரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று பொருள் காண்பது தவறு. விரதம் என்ற வார்த்தைக்கு மன உறுதி அல்லது மனக் கட்டுப்பாடு என்பதே பொருள். விரதம் இருக்கும் நாளன்று தனது ஆசைகளைத் துறந்து மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தாலே போதுமானது. நீங்கள் கடைபிடிக்கும் விரதமானது முழுமையான பலனைத் தந்துவிடும்.

தேர்விற்கு செல்லும் முன் மாணவர்கள் செய்ய வேண்டிய ஆன்மிக கடமைகள் என்ன? - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் வணங்கி பின்பு தேர்வு எழுதச் செல்ல வேண்டும். பொதுத் தேர்விற்குச் செல்லும் போதும், தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் மாணவர்களை விட அவர்களது பெற்றோர்கள்தான் மிகுந்த ஆவலுடனும், டென்ஷனுடனும் இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளின் மேல் பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை இந்த உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது.

ஆகவே மாணவர்கள் தங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கும் தாயாரையும், தந்தையையும் கண்டிப்பாக வணங்கி, அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டுதான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும். அடுத்ததாக ஆசிரியரை வணங்க வேண்டும். பெற்றோருக்காவது ஒரு பிள்ளைதான் தேர்வு எழுதச் செல்லுவான், ஆனால் ஆசிரியர்களுக்கோ தன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நல்லபடியாக தேர்வு எழுத வேண்டும் என்ற அக்கறையும், எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கும். அதனால் பெற்றோரைத் தொடர்ந்து ஆசிரியரை வணங்க வேண்டும். அடுத்ததாக நம்மையும் மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம் அல்லவா, அந்த இறைசக்தியை வணங்க வேண்டும்.

தேர்வு எழுதச் செல்லும்போதும், தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போதும் எதிர்பாராத விதமாக எந்தவிதமான தடங்கலும் உண்டாகிவிடக் கூடாது என்று அந்த இறைசக்தியைத் துதிக்க வேண்டும். இந்த நால்வரையும் வணங்கி அதன்பின்பு தேர்வு எழுதச் செல்வதே மாணவர்களுக்கான ஆன்மிக கடமைகள் என்று சொல்லலாம். இதில் இறைநம்பிக்கை இல்லாத பகுத்தறிவு வாதம் பேசுபவர் கூட முதலில் சொன்ன மூவரையும் கட்டாயம் வணங்கிச் செல்வதே நல்லது. அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்ற கூற்றினையும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற கூற்றினையும் நினைவில் கொண்டு ஈன்றெடுத்த பெற்றோரையும், கல்வி கற்பித்த ஆசிரியரையும் தெய்வமாக எண்ணி வணங்கிவிட்டுத் தேர்வெழுதச் சென்றால் நிச்சயமாக எதிர்பார்க்கும் வெற்றியை மாணவர்களால் பெற இயலும். இதில்  எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கோயில் முகப்பிலும், சந்நதி முகப்பிலும் கஜலட்சுமி உருவம் பதிக்கப்பட்டு இருப்பதேன்? - யாழினி பர்வதம், சென்னை.

வாயிற்படியில் லட்சுமியின் வாசம் இருக்க வேண்டும் என்பதே அதற்கான தாத்பரியம் ஆகும். பொதுவாக நம் வீடுகளில் கூட தலைவாயிற்படியில் விளக்கேற்றி வைத்து வழிபடுவோம் அல்லவா, பெரும்பாலானோர் வீடுகளில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டிட்டு வணங்குவதை வழக்கத்தில் கொண்டிருப்பார்கள். அதாவது வாயிற்படியில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கிறார்கள்.

இதனைத் தெளிவாக உணர்த்தும் விதமாக ஆலய வாயிலிலும், சந்நதியின் நுழைவு வாயிலிலும் கஜலட்சுமியின்  உருவம் பதிக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி என்பது இருபுறமும் யானைகள் துதிக்கையால் வணங்க நடுவில் மகாலட்சுமி அமர்ந்திருக்கும் அம்சம் ஆகும். யானை என்பது ஞானத்தின் அடையாளம். ஞானத்துடன் கூடிய செல்வமே நிரந்தரமானது என்பதை உணர்த்துவதே கஜலட்சுமியின் தாத்பரியம். இதனை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் புரிந்துகொண்டு தனிப்பட்ட முறையில் தனக்குச் செல்வம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாமல் உலக நன்மை கருதி ஆலயங்களில் பிரார்த்தனை செய்ய வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்காகத்தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு நலம் பெற வேண்டும், பசி, பஞ்சம், பட்டினி ஏதுமின்றி நாட்டு மக்கள் யாவரும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்றுதான் மக்களின் பிரார்த்தனை அமைய வேண்டும். அதுவே ஞானத்துடன் கூடிய செல்வம். அதனை வேண்டி இறைவனிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சந்நதியின் முகப்பினில் கஜலட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முகப்பில் கஜலட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டுள்ள ஆலயங்கள் மட்டுமல்ல, அந்த ஆலயத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளும் செல்வச் செழிப்பால்

திளைத்திருப்பதைக் காண இயலும்.

அமானுஷ்யம் என்றால் என்ன? - அரிமளம் இரா. தளவாய் நாராயணசாமி.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அமானுஷ்யம் என்று அழைப்பார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை மட்டும் அமானுஷ்யம் என்று எண்ணக்கூடாது. இந்த உலகில் சாமானிய மனிதர்களாகிய நம் அறிவிற்கு எட்டாத பல விஷயங்கள் உண்டு. மனித சக்தியால் புரிந்துகொள்ள இயலாத விஷயங்கள் அனைத்தையும் அமானுஷ்யம் என்று சொல்லலாம். இவற்றில் ஒரு சில விஷயங்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யக் கூடியவை ஆகவும், சில விஷயங்கள் மாற்றுப்பலன்களைத் தருவதாகவும் இருக்கும். நன்மை தரும் விஷயங்களை தெய்வீகமாகவும், தீய விஷயங்களை பேய், பிசாசு என்ற பெயரிலும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அமானுஷ்யம் என்ற வார்த்தைக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதே நேரடியான பொருள் ஆகும்.

தானம் செய்யும் போது உபயோகித்த பழைய துணிகளைக் கொடுக்கலாமா அல்லது புதிதாக வாங்கிக் கொடுப்பதுதான் சிறந்ததா? எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

புதிதாகத்தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். தானம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. தானம் என்பது பலனை எதிர்பார்த்துக் கொடுப்பது. தர்மம் என்பது பலனை எதிர்பாராமல் மனிதாபிமானத்தின் அடிப்படையில் செய்வது. தானம், தர்மம் இரண்டிற்குமே புதிதாக துணிகளை வாங்கிக் கொடுப்பதுதான் சிறந்தது. இவற்றில் தானம் என்று வரும்போது அதற்கு நேரம், காலம் அத்தனையையும் முன்னரே குறித்து வைத்துக்கொண்டு செய்வார்கள்.

ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து வஸ்திரம் உட்பட எந்த ஒரு தானத்தைச் செய்தாலும் அந்த பொருளை புதிதாகத்தான் வாங்கி வெற்றிலை - பாக்கு, தட்சணையுடன் சேர்த்து தானம் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்த்த பலன் கிட்டும். அதே நேரத்தில் தர்மம் என்பது எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வது. அதற்குக் கால நேரம் கிடையாது. ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு புதிதாக வஸ்திரம் வாங்கி தர்மம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தச் சூழலில் அவர் முன்கூட்டியே திட்டமிட்டு புதிய வஸ்திரங்களை வாங்கித்தான் தர்மம் செய்ய வேண்டும்.

அதே சமயம் இரவு நேரத்தில் யாரோ ஒரு ஆதரவற்ற வயதான முதியவர் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அந்த நேரத்தில் புதிய வஸ்திரம் வாங்குவதற்காக கடையைத் தேடி அலைவதை விட தன்னிடம் இருக்கும் வஸ்திரத்தை உடனடியாகத் தந்து உதவுவதில் தவறில்லை. அந்த நேரத்தில் கால சூழலைப்

புரிந்துகொண்டு உரிய நேரத்தில் செய்யும் உதவியே சிறந்த தர்மம் ஆகும். அந்தச் சூழலில் பழைய வஸ்திரத்தை தர்மம் செய்வதில் எந்தவிதமான குற்றமும் வந்து சேராது. பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும் தர்மத்தின்போது காலச்சூழலுக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும், பலனை எதிர்பார்த்து தானம் செய்யும்போது புதிய துணிகளைத்தான் வாங்கி தானம் செய்ய வேண்டும் என்பதே உங்கள் வினாவிற்கு உரிய தெளிவான விடை ஆகும்.

Related Stories: