காரைக்கால் மண்டபத்தூர் கடற்கரையில் 12 ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி

காரைக்கால்: காரைக்கால் மண்டபத்தூர் மீனவ கிராம கடற்கரையில், சிவன்பார்வதி, பெருமாள், முருகன், திருமேனியழகர் உள்ளிட்ட 12 சாமிகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று பகல் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் திருவேட்டக்குடி திருமேனி அழகர் கோவில், வரிச்சிக்குடி வரதராஜப்பெருமாள் கோவில், மேலகாசாகுடி வரதராஜப்பெருமாள் மற்றும் வரசித்தி விநாயகர் நான்கு கோவில்களில் மாசிமக விழாவையொட்டி, நேற்று பகல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாக, 4 கோயில்களில் இருந்தும் சிவன்பார்வதி, பெருமாள், திருமேனியழகர், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர், அர்ச்சுணன், அம்பாள், வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட 12 சாமிகளும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மண்டபத்தூர் மீனவ கிராம கடற்கரையை வந்தடைந்தது.

பின்னர், 12 சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி மீது கடல்நீரை வாரி இறைத்து சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பட்டினச்சேரியில் மாசிமகத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று பகல் 12 மணிக்கு, நாகை மாவட்டம் திருகண்ணபுரத்திலிருந்து, சவுரிராஜப்பெருமாள் திருவீதியுலா வந்து, திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சவுரிராஜப்பெருமாள் தங்க கருட வாகனத்தில் அலங்கரித்த பவளக்கால் சப்ரத்தில், மாலை 3.15 மணிக்கு திருபட்டினம் பட்டினச்சேரி கடற்கரைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயம் செழிக்கவேண்டி பவளக்கால் சப்ரத்தில் விவசாயிகள் நெற்கதிர்கள் மற்றும் பல்வேறு பூக்களை தொங்கவிட்டிருந்தனர்.

தொடர்ந்து, திருமருகல் வரதராஜப்பெருமாள், திருபட்டினம் வீழி வரதராஜப்பெருமாள், பிரசன்னாவெங்டேசப் பெருமாள், ரகுநாதபெருமாள், நிரவி கரியமாணிக்கப்பெருமாள், காரைக்கால் நித்தியக்கல்யாணப் பெருமாள், கோவில்பத்து கோதண்டராமர் ஆகிய 7 பெருமாள்களும், சவுரிராஜப் பெருமாளை பின் தொடர்ந்து திரு.பட்டினம் கடற்கரைக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு சென்ற 8 பெருமாள்களையும், கடற்கறை மீன வமக்கள் கட்டுமரப்பந்தல் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாற்றி சாமி வழிப்பாடு செய்தனர். தொடர்ந்து, 8 பெருமாள்களும் பல்லக்கில் இருந்தவாறு தனித்தனியே கடலில் இறங்கி தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதுசமயம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் 8 பெருமாள்களையும் ஒருசேர சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: