மகம் பிறந்த நல்லூர்

‘மகம் பிறந்தது நல்லூரில். மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்,’ என்பார்கள். மாசி மகத்தில் இத்தலத்தில் கொடியேற்றம் கண்டுவிட்டுத்தான் குடந்தையில் மாசிமகம் கொண்டாடத் தொடங்குவர். அத்தனை பெருமைமிக்க நல்லூரில், கிரிசுந்தராம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலை கோச்செங்கட்சோழர் கட்டினார். அவர் எடுப்பித்த எழுபது மாடக்கோயில்களில் திருநல்லூர் மிக முக்கியமானது. சுந்தரமூர்த்தி நாயனார், செங்கணாரின் அடியவனாய் தன்னை பாவித்து ‘‘தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கடியேன்’’ என சோழரைப் போற்றுகிறார். வைணவப் பெருந்தகையான திருமங்கை ஆழ்வார்கூட ‘‘எண்டோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்துவளச் சோழன்’’ எனப் பிரபந்தம் பாடி சிறப்பிக்கிறார். செங்கணார் மட்டுமின்றி சங்ககாலத்துக்குப் பிறகு வந்த அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சிக்குரியது.

திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார். தன் நடை தளரும் வயதிலும் கூட உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார். திருச்சத்தி முற்றம் அடைந்து ஈசனைக் கண்டு கண்ணீர் சொரிந்தார். சிவக்கொழுந்தீஸ்வரரைக் குழைந்து தழுவிக் கிடக்கும் பெரிய நாயகியைக் கண்டு, தீந்தமிழ்ப் பாக்களை மாலையாக்கி மகேசனின் பாதத்தில் சமர்ப்பித்து மகிழ்ந்தார். மாலை சூடிய நாயகன், பல்வேறு திருவுருவங்களில் அவருக்கு தரிசனம் அளித்தான். பேரானந்தப் பெருவெள்ளத்தில் அவரை மூழ்க்கினான். ஆனாலும், எங்கோ தீராத ஏக்கம் நாவுக்கரசரின் நெஞ்சைத் தவிக்க வைத்தது.

‘‘கொன்றை சூடிய வேந்தன் தம் நனைந்த திருவடிகளை தேவர்கள் தலையில் வைத்தீராமே’’ என ஈசனை நோக்கி நெக்குருகினார். அந்த பாக்கியம் எமக்குக் கிடையாதா என ஏங்கி, சத்திமுற்றத்துச் சந்நதியை தம் கண்ணீரால் நனைத்தார். சிவக்கொழுந்தீசனும், ஐயனை குழைவாய்த் தழுவும் கோலம் கொண்ட உமையும் நாவரசரை குளுமையாகப் பார்த்தனர். அந்நேரம் அசரீரியாய் ‘நல்லூர் வருவாயாக, விரைவாய் வருவாயாக,’ என ஒருமுறைக்கு இருமுறை கட்டியம் கூறுவதுபோல் பகர்ந்தார் ஈசன். திருநல்லூர் திக்கு நோக்கி விரைந்தார் நாவுக்கரசர். சிவத்தொண்டர்கள் நிறைந்த திருநல்லூர் அந்த மகானின் அடி பணிந்து வணங்கியது. திருநல்லூர் நாயகன் கல்யாண சுந்தரேஸ்வரின் முன்பு களிப்போடு அமர்ந்தார்.

பக்தி கண்ணீராய்ப் பெருக்கெடுக்க, ஈசனைப் பார்த்தார். ‘‘கூற்றம் எனும் எமன் வந்து குலைக்கும் முன் பெருமானின் பூவடிகளை என் தலைமீது பொறிக்க மாட்டீரா’’ என நெகிழ்ந்து கோரினார். நல்லூர் பெருமான் கனிந்தார். உமையன்னையும் உடன் அமர்ந்தாள். சட்டென்று ஈசன் லிங்கத்தினின்று ஜோதியாய் கிளர்ந்தெழுந்தான். வீரக்கழல் அணிந்த ஈசனின் திருவடி ஜோதியின் ஒளிபட்டுப் பிரகாசித்தது. நாவுக்கரசரின் முகம் திகைத்து ஒளிர்ந்தது. ‘எம்பெருமானே... எம்பெருமானே’ என நாத்தழுதழுக்க மெய் சிலிர்த்தார். நெகிழ்ந்து கிடந்த நாவுக்கரசரின் தலையின் மேல் தம் திருவடிகளை மெல்ல ஈசன் பதிக்க பரவசம் பூண்டார் அந்த சிவக் கொழுந்து. புறவுலகின் நினைவை முற்றிலும் இழந்து அகத்தில் பொங்கி ஆர்ப்பரித்த ஈசனின் அருட் சமுத்திரத்தில் கரைந்தார்.

ஈசன் இன்னும் அழுத்தமாய் சிரம் பதிக்க ஈசனோடு ஏகமாய் கலந்த நிலையில் யாவினுள்ளும் ஈசன் உறைந்திருப்பதை உணர்ந்து  குழந்தைபோல தளர் நடை நடந்து சந்நதிக்கு அருகே அமர்ந்தார். உள்ளுக்குள் பெய்த தெய்வீகப் பெருமழையை பாக்களாக மாற்றி திருப்பதிகங்களாக திருவாய் மலர்ந்தருளினார். ஒவ்வொரு பதிகத்திலும் ‘நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே’ என்று தம் சிரசில் ஈசன் சூடிய திருவடியை நினைந்து, நினைந்து நெகிழ்ந்தார். அதோடு நாவுக்கரசர் விடவில்லை. நம்மீது கருணை கொண்டவரான அவர், ‘‘எம் தலையில் பதித்ததுபோல் உம்மை நாடிவரும் பக்தர்பெருமக்களின் தலையிலும் திருவடி பதிக்க வேண்டுகிறேன்’’ என வினயமாய் கேட்க ஈசனும் சம்மதமாய் உகந்தான்.

இத்திருநல்லூர் நான்கு ராஜவீதிகளுடன் சப்தசாகரம் எனும் ஏழுகடல் தீர்த்தத்தோடு விளங்குகிறது. ஏழுநிலை மாடத்துடன் கூடிய வானளாவி உயர்ந்து நிற்கிறது ராஜகோபுரம். உட் கோபுர வாயிலுக்குள் சென்று இடது புறம் பார்க்க அமர்நீதிநாயனாரும், கையில் மழலையுடன் அவர் துணைவியாரும் நல்லூர் பெருமானை வந்து தரிசிக்கும் பக்தர்களை இனிதே வரவேற்பது போன்ற பாங்கு அற்புதமானது. சிவத்தொண்டர்களுக்கு ஆடை அளித்து, அவர்கள் பசியாற இன்னமுது படைப்பதையே தனது வாழ்க்கையாக்கிக் கொண்ட குடும்பம் அது. நல்லூர் பெருமானும் வேதியர் வடிவில் விளையாடல் புரிந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார் என்கிறது பெரிய புராணம். இத்தலத்திற்கு பெரும் பெருமை சேர்த்த திவ்ய தம்பதிகளை கைகூப்பி வணங்கிவிட்டு உட்பிராகாரத்தை நோக்கி நகர்வோம்.

சப்தரிஷிகளும் பிரளயத்தின்போது ஒடுங்கும் விதமாக, லிங்கத்தினுள் ஏழு துளைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பிரபஞ்சத்தின் மாற்றத்திற்குக் காரணமாக இத்தல ஈசன் விளங்குவதால், லிங்கத்தின் நிறம் ஆறு நாழிகைக்கு ஒருமுறை மாறுவது பார்க்க, வியப்பு எல்லை மீறும்; உடல் சிலிர்க்கும். நாம் பார்க்கும்போதே அழகாய் நிறம் மாறும் அற்புதம் மனதை கொள்ளை கொள்ளும். தாமிர நிறம், இளம் சிவப்பு, உருக்கிய தங்கம், கரும்பச்சை, இன்ன நிறமென்று சொல்லமுடியாத தோற்றம் என்று காலைமுதல் இரவுவரை தொடர்ச்சியாக வண்ணம் மாறிக்கொண்டே இருக்கும். அதனாலேயே இவரை பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். நாவுக்கரசர் ஈசனிடம் வேண்டிக்கொண்டது போல, ஈசனின் திருவடிகளை பக்தர்களின் தலையில் பதித்து ஆசியளிப்பது இங்கு நிரந்தர வழக்கமாக உள்ளது, பெருமாள் கோயிலில் சடாரி கொண்டு ஆசியளிப்பது போல! சிவன் சந்நதிக்கு அருகிலேயே மலைமகளான கிரிசுந்தரி அருள் அமுதமாக நிற்கிறாள். உயர்ந்த திருவுருவம் உடைய கிரிசுந்தரி அருளைப் பொழிவதில் மேருவை விட உயர்ந்தவளாய் விளங்குகிறாள்.

நல்லூரின் புகழ் சொல்லும் இன்னொரு விஷயம், இத்தலத்து பிராகாரத்தில் அமைந்துள்ள நல்லூர் அஷ்டபுஜமாகாளி ஆவாள். பிரளயத்தோடு காளிக்கு நெருங்கிய தொடர்பிருப்பதால் இவள் இங்கே அமர்ந்துள்ளாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாய் அமர்ந்திருப்பவள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள்.

குந்திதேவி சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி பூஜித்த லிங்கத்தை கோயிலின் உட்பிராகாரத்தில் காணலாம். இரண்யனை வதம் முடிக்கும் முன்பு, எவ்வுருவம் தாங்கி சம்ஹாரம் செய்வது என்று இத்தலத்து ஈசனிடம் திருமால் யோசனை கேட்க, ‘நரசிங்கனாகச் செல்’ என்று ஆசி கூறினாராம் இந்த கல்யாண சுந்தரேஸ்வரர். அதற்கு ஆதாரமாக கருவறை விமானத்தின் பின்புறம் நரசிம்மம் காட்சி அளிக்கும் சிற்பம் இத்தலத்து அற்புதம். இன்னும் தோண்டத் தோண்ட நூறாயிரம் விஷயங்களைக் கொட்டும் கோயில் இது. கும்பகோணம்  தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது திருநல்லூர் எனும் இத்திருக்கோயில்.

கிருஷ்ணா

Related Stories: