சித்த புருஷர்கள் தியானம் செய்த மருங்கூர் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்மீக தலங்கள் அதிகம் உள்ளன. இதில் முருகப்பெருமானுக்கு 3 தலங்கள் பிரதானமாக உள்ளன. இதில் வேளிமலை குமாரகோவில், தோவாளை முருகன் கோயில், மருங்கூர் முருகன் கோயில்கள் பிரசித்திப்பெற்றவை. நாகர்கோவில், அஞ்சுகிராமம், தோவாளை ஆகிய பகுதிகளில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் குன்றின்மேல் மருங்கூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. சுசீந்திரம் மருங்கில் (கரை) அமைந்த ஊர் என்பதால் மருங்கூர் என பெயர் பெற்றது. அகலிகை மேல் இந்திரன் கொண்ட மோகத்தால் கவுதம முனிவர் சாபம் கொடுத்த இடம் சுசீந்திரம். அப்போது இந்திரனுடன் வந்த அவனது வெள்ளை குதிரையான ‘உச்சை சிறவல்’ சாபம் நீங்கிய இடம் மருங்கூர் என கருதப்படுகிறது. எனவே இந்த ஊருக்கு ‘வாசியூர்’ என்றும் பெயர் உண்டு.

எவ்வித அலங்காரமும் இன்றியே முருகன் இங்கு மிக அழகாக காட்சி தருகிறார். சித்தர் ஒருவரின் ஜீவ சமாதியும் இக்கோயிலில் உள்ளது. அதன்மேல் சிவன் சன்னதியும் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பழவூருக்கு தென்மேற்கே அமைந்துள்ள இடைமலை தொண்டு வழியாக முன்னர் மக்கள் இக்கோயிலுக்கு வந்து சென்றுள்ளனர். அய்யா வைகுண்டர், சுவாமி நாராயணகுரு ஆகிய சித்த புருஷர்கள் இக்கோயிலில் தியானம் செய்துள்ளனர். ஒடுக்கத்து வெள்ளி என்றழைக்கப்படும் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்கோயிலில் காவடி நேர்ச்சை செலுத்துவது மிகவும் பிரசித்தம். இந்த கோயில் அமைந்துள்ள குன்றை சுற்றிலும் இயற்கை எழில் காட்சிகள், அங்கு செல்லும் பக்தர்களின் மனதை வருடும். அவர்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.

குன்றுதோறும் குமரன் கோயில்கள் என்பர். அதேபோல் குமரியில் வெள்ளிமலை, முருகன் குன்றம், தோவாளை, ஆரல்வாய்மொழி ஆகிய இடங்களில் கோயில்கள் இருந்தாலும்,  வேளிமலை மற்றும் மருங்கூர் முருகன் கோயில்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருங்கூர் கோயிலுக்கும் வருகின்றனர். இக்கோயில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும். இதுபோல் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். இங்கு கந்த சஷ்டி விழா சிறப்பு பெற்றதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

Related Stories: