நெல்லையப்பர் கோயில் பத்ர தீப விழாவில் தங்க விளக்கில் தீபம் ஏற்றும் வைபவம்

நெல்லை: நெல்லையப்பர், காந்திமதியம்பாள் கோயிலில் பத்ர தீப திருவிழாவையொட்டி நேற்றிரவு தங்க விளக்கேற்றும் வைபவம் நடந்தது. இன்று பத்ரதீப விழா நடக்கிறது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் பத்ரதீப திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான பத்ர தீப திருவிழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இத்திருவிழா இன்று (4ம் தேதி) வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமி வேணுவனநாதருக்கு (மேட்டுலிங்கம்), மூலஸ்தானம் ருத்ர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனையும், மூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.  

விழாவையொட்டி நேற்று (3ம் தேதி) இரவு 7 மணிக்கு மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த தீபமானது இன்று 4ம் தேதி வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். இதனை தொடர்ந்து இன்று ஆறுமுக நயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி உள், வெளி பிரகாரங்கள், அம்மன் சன்னதி பிரகாரங்கள், ஆறுமுகநயினார் உள்சன்னதி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் பத்ர தீபம் ஏற்றும் வைபவம் நடக்கிறது.

இதனையடுத்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப் பரத்திலும் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் ரத வீதியுலாவும் இரவு 10 மணிக்கும், கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நெல்லை இந்து ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: