மருதமலையில் கந்த சஷ்டி விழா : காப்பு கட்டுதலுடன் துவங்கியது

தொண்டாமுத்தூர்: கோவையை அடுத்த மருதமலை முருகன் கோயிலில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. இதற்காக நேற்று அதிகாலை கோ பூஜையுடன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து முருகப் பெருமானுக்கு பால், மஞ்சள், ஜவ்வாது, திருமஞ்சனம், இளநீர், தேன், விபூதி உட்பட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு உஷா கால பூஜை, 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகம் நடைபெற்றது.

பின்னர் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை, மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான 13ம் தேதி (செவ்வாய்) காலை 6.30 மணிக்கு மூலவர் சண்முக அர்ச்சனையும், 9 மணிக்கு யாக சாலை பூஜை நடக்கிறது. பகல் 12 மணியளவில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சண்முகா அர்ச்சனை, சிறப்பு பூஜை, மகா தீபாரதனை நடக்கிறது. மதியம் 3 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி பச்சைநாயகி அம்மன் சன்னதியில் சக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் வீர நடனக்காட்சி நடைபெற்று சூரசம்காரத்திற்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதை தொடர்ந்து தாராகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதர சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம், 11 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், 12 மணிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர்(பொ) மேனகா, கண்காணிப்பாளர் செல்வராஜ், மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: