ஸ்டார் – திரைவிமர்சனம்

‘பியார் பிரேமா காதல் ’ படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ ஸ்டார் ’எப்படியாவது தனக்குக் கிடைக்காத சினிமா வாய்ப்பு தன் மகனுக்குக் கிடைத்துவிட வேண்டும் என சிறுவயது முதலே தன் மகன் கலையை(கவின்) சினிமா நடிப்புப் பாடம் புகட்டி ஊட்டுகிறார் பாண்டியன்(லால்). ஆனால் அம்மா கமலாவுக்கு(கீதா கைலாசம்) இதில் துளியும் விருப்பம் இல்லை. தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே அம்மாவுக்குத் தெரியாமல் தந்தை- மகன் கூட்டணி படிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் சினிமா நடிப்பை நோக்கி பல முயற்சிகள், பல வாசல்களைத் தட்டுகிறார்கள். ஆனால் எல்லா கதவுகளும் அடைத்துக்கிடக்கின்றன. சினிமா தாண்டி எதுவும் தெரியாது என்னும் கலைக்கு கல்லூரி தோழி மீரா(ப்ரீதிதி முகுந்தன்) மீது காதல் ஒருப்பக்கம்.

ஒருபுறம் காதல், இன்னொரு புறம் கல்லூரி அட்ராசிட்டிகள் இடையில் நடிப்புக்கான தேடல் எனச் செல்கிறது. இந்தத் தேடல் கலையின் வாழ்க்கையை என்னவாக மாற்றுகிறது, முடிவு என்ன என்பது மீதிக்கதை. படத்தின் கதைப்படி கவின் தன் திறமையைக் காட்டியேத் தீர வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் தனது முழு சக்தியையும் வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார். முந்தைய இரண்டு படங்களிலேயே கூட அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதைக் காட்டிலும் இந்தப் படத்தில் இன்னும் கூடுதல் முயற்சிகள் தெரிகின்றன. ‘ என்னடா இந்த மூஞ்சியில உங்களுக்குப் பிரச்னை, அதை டைரக்டர் சொல்லட்டும், நீ யார்டா சொல்ல? ’ என எகிறி விட்டு அப்படியே இயக்குநரைப் பார்த்தவுடன் அடங்கி நின்று வசனம் பேசுவது, ‘ அப்பா நீ அப்படி சொல்லாதப்பா‘ என அப்பாவையே எதிர்த்து சட்டையைப் பிடிப்பது, ‘என்னால முடியலை, என்ன விட்டுப் போயிடு‘ எனக் குமுறுவது என எங்கும் கவின் திரைக்கதையை தாங்கி நிற்கிறார்.

லால் , கீதா கைலாசம் இருவருமே 90களின் அப்பா, அம்மாக்களை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்கள். நாயகிகள் ப்ரீத்தி, மற்றும் அதிதி போகன்கர் இருவரும் ரொமான்ஸ், டூயட் , எமோஷன்கள் என தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். டிரெய்லரில் காட்டியக் காட்சிகள் காரணமாக பலத்த எதிர்பார்ப்புகள் இருந்த காரணமோ தெரியவில்லை, படம் முதலில் நீளம் அதிகம் எனத் தோன்ற வைக்கிறது. அதிலும் இரண்டு நாயகிகள் அழகாக இருந்தாலும் அவர்கள் வரும் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. சில இடங்களில் இப்போது எதற்கு இந்தக் காட்சி என்னும் எண்ணம் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை. இயக்குநர் இளன் மேக்கிங், காட்சிகளின் தரம் என இதில் நன்கு கவனம் செலுத்தியிருக்கிறார்.

அதேபோல் திரைக்கதையில் எப்போதுமான யூகிக்க முடிந்த காட்சிகளை சற்றே குறைத்திருக்கலாம். ஏற்கனவே ‘முகவரி‘, ‘மயக்கம் என்ன‘ உள்ளிட்ட படங்கள் பலவாறு சொல்லிக் கதையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் புதுமையான இக்காலத்துக்கும் பொருந்தும்படியாக பல காட்சிகளை உருவாக்கியிருக்கலாம். சில சர்ப்ரைஸ் காட்சிகள், இறுதியில் வரும் தருணங்கள் இவையெல்லாம் படத்தின் பிளஸ். 90களின் கால கட்டம் என்கையில் கவின் உடையில் அவ்வளவு மெனெக்கெடல் கொடுத்த படக்குழு, மற்றவர்கள் உடையில் ஏன் கவனம் செலுத்தவில்லை எனத் தெரியவில்லை.

எழிலரசு ஒளிப்பதிவில் 90களின் சென்னை, மும்பை என மிக அற்புதமாக மேட்ச் செய்திருக்கிறார். லைட்டிங்குகளும் அருமை. யுவன் பின்னணி இசை படத்திற்கு இன்னொரு பலம். ‘மெலோடி’ குத்துப் பாடல், வின்டேஜ் லவ் பாடல்கள் பிளே லிஸ்ட் ரகம், எனினும் உண்மையாகவே வின்டேஜ் யுவன் எங்கே என்னும் தேடல் தோன்றுகிறது. மொத்தத்தில் படம் முழுக்க சினிமா கனவுகளுடன் வரும் இளைஞர்களுக்கு ஊக்கமோ, அல்லது உற்சாகமோ அதிகம் கொடுக்காமல் குடும்ப கஷ்டம், ஏழ்மை, எனக் காண்பித்ததில் படம் நெடுக சோகம் சற்றுத் தூக்கலாக தெரிகிறது. நல்ல பொழுதுபோக்கு படமா என யோசித்தால் சந்தேகமே. முதலிரண்டு படங்கள் நல்ல படம் கொடுத்து பெயர் வாங்கிய கவினுக்கு நல்ல நடிகர் என்கிற பெயரைத் தக்க வைத்துக்கொள்ள இந்த ‘ஸ்டார்’ படம் உதவும்.

The post ஸ்டார் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: