குண்டும் குழியுமான மேல்நல்லாத்தூர் சாலை: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சாலை பல்வேறு இடங்களில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லாததால் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், வெங்கத்துார் ஆகிய மூன்று கிராம ஊராட்சி வழியாக பாப்பரம்பாக்கம் கிராமத்திற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். பாப்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் செயல்படுவதால் தொழிற்சாலை ஊழியர்களும் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையில் தற்போது பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக நடந்து செல்லும் மாணவ மாணவியர்கள், பொது மக்கள் முதியோர் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  அதே நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் செல்லும் போது தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலைமை அதிகரித்துள்ளது.  அதே போல் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் செல்வோர் செல்ல வேண்டிய பகுதிக்கு விரைந்து செல்ல முடியாமல் ஊர்ந்து செல்ல வேண்டியிருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இரவு நேரங்களில், விபத்தில் சிக்கும் அபாயகரமான நிலையும் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குண்டும் குழியுமான மேல்நல்லாத்தூர் சாலை: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: