வாங்கும் எனக்கு இருகை; அருள்வழங்கும் உனக்கோ பன்னிருகை!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 9

Advertising
Advertising

‘வெற்றி வடிவேலன் - அவனுடை

வீரத்தினைப் புகழ்வோம்!

சுற்றி நில்லாதே போ - பகையே!

துள்ளி வருகுது வேல்’

- என்று எக்காளமிட்டபடி எழுச்சியுடன் பாடுகிறார் மகாகவி பாரதியார்.‘வேல்’ என்றாலே வெல்லுவது என்று பொருள்.

‘‘மாமயிலோன் வேல் பட்டழிந்தது

வேலையும், சூரனும், வெற்பும்!

மேருமலையும், கரிய சூருமலையும்,

பழைய வேலை அலையும் பகையும்

அஞ்சவிடும் வேலா!’’

- என்றும் அருணகிரிநாதர் ஆறுமுகனின் கையில் விளங்கும் ஆயுதமான வேலைப் புகழ்ந்து போற்றுகின்றார்.‘வேலாயுதத்திற்கு மேல் ஆயுதம் இல்லை’ என்றும், ‘வேலை வணங்குவதே வேலை’ என்றும் முருகனடியார்கள் மொழிகின்றனர். இப்படிப்பட்ட வேலாயுதத்தை ஏந்தி திருமுருகன் வள்ளி தெய்வானையோடு தரிசனம் தரும் பல தலங்களை நாம் பார்த்திருப்போம். குமரக்கடவுள் ஏந்தியுள்ள படைக்கலம் ‘வேல்’ என்று மட்டுமே நாம் நினைக்கின்றோம். ஆனால் ஆன்மிகப் பெரியவர்களை அணுகிக் கேட்டால் சிறப்பான விவரம் ஒன்று தெரிய வரும்.

‘வாங்கும் எனக்கு இருகை! - அருள் வழங்கும் உனக்கோ பன்னிருகை’ என்ற பாடலை நாம் அறிவோம். ‘பன்னிரண்டு கரங்கள் பெற்ற அப்பரமன் பன்னிரு ஆயுதங்களை ஏந்தியுள்ளான்’ என்கின்றனர் பைந்தமிழ்ப் புலவர்கள். கச்சியப்பர் அருளிய ஸ்ரீகந்த புராணக் காவியம் போருக்குப் புறப்படும் முருகப்பெருமானின் சரிதத்தை விரிவாக விளக்குகின்றது. சரவணத்தில் ஆறு கமல மலர்கள் மீது அனல் வடிவமாக ஜொலித்து, பின்னர் கார்த்திகை மாதர் அறுவர் கரங்களில் மலரினும் மெல்லிய மழலையாக மிளிர்ந்து ‘அழகெல்லாம் முருகனே’ என்று அமரரும்,

முனிவரும் அகமகிழ்ந்து துதிக்க, நிகழ்ந்த கந்தப்பெருமானின் அவதாரம் கண்டு அழகில் சிறந்த திருமாலே அதிசயித்தார். ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். அதன் பின்னர் ஆதிசிவனுக்கே அரிய பிரணவ மந்திர உபதேசம் நிகழ்த்தி அறிவின் சொரூபமாக ஆறுமுகன் உயர்ந்தார். அழகும், அறிவும் போதுமா? சூராதி அவுணர்களை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் வீழ்த்த ஆற்றல் வேண்டுமே! அந்த ஆற்றலோடு கந்தப்பெருமான் விளங்க ஆவன செய்யுங்கள் என்று இந்திரன், பிரம்மா, திருமால், தேவர்கள் அனைவரும் ஒரு சேர சென்று சிவபெருமானை வேண்டினார்கள்.

பரமசிவனார் தன் பாலகனை நோக்கி ‘மைந்தனே! உலக உயிர்களைத் துன்புறுத்தி, தேவர் உலகத்தைப் பாழ்படுத்தி கொடுங்கோல் அரசு புரியும் சூரபத்மனின் கொட்டத்தை அடக்கி இந்திராதி தேவர்களுக்கும் உலகத்திற்கும் நன்மை புரிய போருக்குச் செல்வாயாக! ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்களாக ஆண்டு வரும் சூராதி அவுணர்களை வீழ்த்த உன் பன்னிரண்டு கரங்களிலும் பன்னிரண்டு ஆயுதங்களை நான் படைத்து இப்போது அவற்றை உனக்கு நல்குகின்றேன் என்றார். பின்னர் சிவபெருமான் வல்லமை மிகுந்து விளங்கும் ஏகாதச உருத்திரர்களை மனத்தில் நினைக்க அவர்கள் பதினொரு ஆயுதங்களாக உரு எடுத்தனர்.

பதினொரு உருத்திரர்களும் படைக்கலன்களாக மாற பன்னிரண்டாவது கைக்கு ‘ஆயுத நாயகம்’ என்று போற்றப்படுகின்ற வேலாயுதத்தை உருவாக்கி மைந்தனுக்கு அவற்றை வழங்கினார் சிவபெருமான். ‘எப்படைக்கும் நாயகம் ஆவதோர் தனிச்சுடர்வேல் நல்கியே மதலை கை கொடுத்தான்’படைக்கலன்களைப் பெற்ற பன்னிருகை வேலவன் ஒன்பது சேனாதிபதியருடன், லட்சத்து ஒன்பான் வீரர்களுடன் வாயு பகவான் தேராக அமைய போர்க்களம் புறப்பட்டார். வெற்றி வடிவேலனுடய இவ்வீரக் காட்சியை இலக்கிய இன்பத்துடன் விவரிக்கிறது இந்த இனிமையான கவிதை. இப்பாடல், திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியின் கடவுள் வணக்கமாக அமைந்துள்ளது.

பன்னிருகை வேல் வாங்க, பதினொருவர் படை தாங்க

    பத்துத் திக்கும்

நன் நவவீரரும் புகழ, மலைகள் எட்டும்

    கடல் ஏழும் நாடி ஆடிப்

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கொழித்துப்

    புய நான் மூன்றாய்

தன் இருதாள் தரும் ஒருவன் குற்றாலக் குறவஞ்சி

    தமிழ் தந்தானே!

குறிஞ்சி நிலக் கடவுளான குமரனை அந்நிலத்துக்கே உரிய இலக்கியமான குறவஞ்சி எத்தனை அழகாகச் சித்தரிக்கின்றது! பன்னிரண்டு என்ற எண்ணில் தொடங்கி பதினொன்று, பத்து என இறங்குமுகமாக ஒன்று வரை எண்கள் அர்த்தப் பொலிவோடு அற்புதமாகப் பொருந்தி வர திரிகூடராசப்பக் கவிராயர் இந்த அமுதக் கவிதையைத் தந்தது அவரே சொல்லும்வண்ணம் ஆறுமுகன் திருவருள் அன்றி வேறு என்ன? ‘பன்னிருகை வேல் வாங்க, பதினொருவர் படைதாங்க’ பன்னிரண்டாவது கையில் வேலாயுதம் பளிச்சிடுகின்றது. பதினொரு உருத்திரர்கள் பதினொரு படைக்கலன்களாக, மற்ற கரங்களில் விளங்குகின்றார்கள்.

அவர்கள் அனைவரும் தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், தாமரை, தண்டு, வில், மணி, மழு என ஆனார்கள். திக்விஜய பிரதாபராக பன்னிரு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் ஒளிர போருக்குப் புறப்பட்ட நேர்த்தியைக் கண்டு எண்திசை பூமி, ஆகாயம் என திக்குகள் பத்தும், வீரவாகு, வீரமகேந்திரர் என விளங்கும் ஒன்பது வீரர்களும் போற்றினர். கயிலை, மந்தரம், இமயம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலமலை, கந்த மாதனம் ஆகிய எட்டு மலைகளிலும், நன்னீர், உவர் நீர், பால், நெய், தயிர், தேன், கருப்பஞ்சாறு ஆகிய ஏழு கடல்களிலும் திருவிளையாடல்கள் நிகழ்த்தினார் முருகப்பெருமான்.

ஈசானம், தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம் வாமதேவம், அதோமுகம் என ஆறுமுகங்கள் சுடர் வீச, அடியார்களின் அஞ்சுதலை அறவே நீக்கி, பன்னிரண்டு திருத்தோள்கள் (நான்கு x மூன்று = பன்னிரண்டு) விம்மிதம் பெற உலக உயிர்களுக்கு உய்வைத் தர இரண்டு கமல மலர்ப் பாதம் தந்து காக்கும் ஒப்பற்ற ஒருவன், குறிஞ்சி நிலக் கோமான் குமரேசன் இக்குற்றால குறவஞ்சியைப் பாட எனக்கு வாக்கு வண்மையை வழங்கினான் என்கிறார் திரிகூடராசப்பக் கவிராயர். தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்தால் முற்பட்டதும், கவிதை நயத்தில் தலை சிறந்து விளங்குவதும் குற்றாலக் குறவஞ்சியே!

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்

கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்

தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறை முடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!

ஆண்டவன் எழுந்தருளி அருள் வழங்கும் அரிய மலையான குற்றாலத் திரிகூடமலையை நேரில் தரிசித்தால் கூட குறவஞ்சிப் பாடல்களைப் படிக்கும் பரவசத்திற்கு ஈடாகாது! எளிமை, இனிமை, எதுகை, மோனை, கற்பனை அழகு, கவிதைச்சுவை, சந்த நலம், செந்தமிழ் வளம் என அனைத்தும் அமைந்து அமுத அருவியாகப் பொழிகிறது திரிகூடராசப்பக் கவிராயரின் தேன் தமிழ்!

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

Related Stories: