விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டி: “மிஸ் திருநங்கை” சென்னை சாதனா

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி நாடு முழுவதும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இதனிடையே, நேற்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை திருநங்கைகள் அமைப்பு சார்பில், எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடனம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும், இறுதியாக மிஸ் திருநங்கை அழகிபோட்டியும் நடந்தது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் திருச்சி சிவா, ரவிக்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் திரைப்பிரபலங்கள் நடிகர் சூரி, நளினி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசுகையில், திருநங்கைகள் என்றாலே ஓடி ஒளிந்த காலம் மாறி தற்போது மிடுக்குடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களாக, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக, நீதித்துறை, காவல்துறை, பேராசிரியர் என்று எல்லா துறைகளிலும் திருநங்கைகள் இடம் பெற்றுள்ளனர். வேலூரில் ஒரு திருநங்கை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இப்படி திருநங்கைகள் வளர்ச்சி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. திருநங்கைகளுக்கு யாரும் எதுவும் செய்யாவிட்டாலும் அவர்களை சுதந்திரமாக விட்டாலே போதும். அவர்களாகவே வளர்ந்து விடுவார்கள். பாரதக் கதையிலும் அரவான் இடம் பெற்றுள்ளார். திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். திருநங்கைகள் என்று ஒதுக்கியது மாறிவிட்டது. இனிமேல் திருநங்கை தங்கள் வீட்டில் இருப்பதை ஊருக்கே சொல்லி விழா எடுக்கும்  காலம் வரும் என்று பேசினார். தொடர்ந்து ரவிக்குமார் எம்பி பேசுகையில், விழுப்புரத்தில் நிருநங்கைகளுக்கு காப்பகமும், ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றார். விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மிஸ் திருநங்கை அழகி போட்டியில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று வித சுற்றுகள் வாரியாக போட்டிகள் நடைபெற்றன. நடை, உடை, பாவனை மற்றும் பொது அறிவு கேள்விகள் உள்ளிட்ட வகையில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் சென்னையை சேர்ந்த சாதனா என்பவர் மிஸ் திருநங்கை பட்டத்தை வென்றார். 2வது பரிசை சென்னையை சேர்ந்த மதுமிதாவும், 3வது பரிசை திருச்சியை சேர்ந்த எல்சா ஆகியோர் பிடித்து பட்டத்தை வென்றனர்….

The post விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டி: “மிஸ் திருநங்கை” சென்னை சாதனா appeared first on Dinakaran.

Related Stories: