திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் துவங்கும்-தமிழக அரசு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை திட்டப்பணிகள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் விரைவில் பணிகள் துவங்கும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருத்துறைப்பூண்டி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து வேதாரண்யம் சாலை வரை ஒரே சாலைதான். இந்த சாலையிலிருந்து தான் மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பிரிவு நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி தெரு சாலைகள் உள்ளது. நகரில் வாகன போக்குவரத்து அதிகமாகி வருவதாலும் சாலைகளில் அளவுக்கு அதிகமாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும் இந்த ஒரே சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் எம்எல்ஏ உலகநாதன் சட்டசபையில் வைத்த கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் கருணாநிதி திருவாரூர் சாலை வேளூர் பாலத்திலிருந்து நாகை பைபாஸ் சாலை வரை 2.6 கி.மீ. புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்தப் பணி தொடங்கப்பட்டது. புறவழிச்சாலை செல்லும் இடங்களில் உள்ள நிலங்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். நிலங்களுக்கான மதிப்பீடு தொகை நிர்ணயிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பணி நின்றுபோய் நிதியும் திரும்பி போய்விட்டது. இந்நிலையில் புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த ரூ.4 கோடி 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய திட்ட மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணிகளை மீண்டும் துவங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தில் திருத்துறைப்பூண்டி- திருக்குவளை அகல ரயில் பாதையில் ரயில்வே பாலம் மற்றும் தண்டவாளம் அமைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.திருத்துறைப்பூண்டியில் ஒரே சாலையில் நகர பகுதி முழுவதும் அடங்கியுள்ளதால் இதில் தான் வாகனங்கள் செல்லவும் பொதுமக்கள் நடந்து செல்லவும் வேண்டும். திருத்துறைப்பூண்டியில் புறவழி சாலை இல்லாததால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை, மாலை நேரங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்க வேண்டும் என்று வர்த்தக சங்கம், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எம்எல்ஏ மாரிமுத்து, திமுக நகர செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் ஆகியோரது தொடர் முயற்சியில் தற்போது தமிழக அரசு புறவழிச்சாலை திட்டபணிகளுக்கு ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சில தினங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. விரைவில் புறவழிச்சாலை பணிகள் துவங்கும் என்று நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் துவங்கும்-தமிழக அரசு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: