முதன்முறையாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சிவராத்திரியை முன்னிட்டு 12 மணி நேர பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள்: 40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் முதன்முறையாக மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் 1ம் தேதி 12 மணி நேர பிரமாண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வரும் 1ம் தேதி மாலை 6 மணி முதல் 2ம் தேதி அதிகாலை 6 மணி வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, கோயில்களில் பாரம்பரிய கலை மற்றும் கலாசார, ஆன்மீக நிகழ்ச்சியை நடத்த அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், முதன்முறையாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 1.3.2022ம் தேதி (நாளை) இந்து சமய அறநிலையத்துறை சார்பாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சென்னை ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் மோகன்தாஸ் நாதஸ்வர குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்குகிறது. இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சங்கநாத அறக்கட்டளை சார்பில் சிவ தரிசனம்- திருமுறை மற்றும் வேத பாராயணம் மற்றும் கயிலை வாத்தியம் நடக்கிறது.இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை தரானா அகாடமி ஆஃப் கதக் சார்பில் ஜூகள் பந்தி நடனம் நடைபெறுகிறது. இரவு 9 மணி முதல் இரவு 10.30 மணி வரை நமது வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படுவது பக்தியா? தொண்டா? பட்டிமன்றம் நடக்கிறது. சுகி சிவம் நடுவராக பங்கேற்கும் இந்த பட்டிமன்றத்தில் பக்தியே என்கிற தலைப்பில் மாது, பைந்தமிழ் அரசி, பாரதி பாஸ்கர் ஆகியோரும், தொண்டே என்கிற தலைப்பில் நகைச்சுவை நயாகரா மோகனசுந்தரம், சிவ.சதீஷ்குமார் ஆகியோர் பேசுகின்றனர்.இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை சுசித்ரா, வித்யா மற்றும் வினயா குழுவினர் சார்பில் தமிழ் பக்தி இசையும், இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை ஸ்ரீ தேவி நிருத்யாலயா குழுவினர் சார்பில் சிவமயம்-நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை தேச.மங்கையர்கரசி தலைமையில் சர்வம் சிவமயம்-தியானம் மற்றும் சொற்பொழிவு நடக்கிறது. நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பாடகர்கள் சத்யபிரகாஷ், மாளவிகா சுந்தர், ஸ்ரீநிஷா, நாராயணன் மற்றும் குழுவினர் சார்பில் பக்தி பாடல்கள் நடக்கிறது. அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமி கலைக் குழுவினர் சார்பில் கிராமிய பக்தி இசை பாடல்கள் நடக்கிறது. இந்தவிழாவுக்கான ஏற்பாடுகள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று அறநிலையத்துறை சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கோயில்களில் தல வரலாறு தொடர்பான புத்தகம், அறநிலையத்துறை சார்பில் மாவட்ட வழிகாட்டி கையேடு உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பழனி, திருத்தணி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு  கோயில்களின் சார்பில் பிரசாதத்தை ஒரே இடத்தில் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இலவச பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 40 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள். எனவே, கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி, நடமாடும் கழிவறை வசதி, வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது….

The post முதன்முறையாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சிவராத்திரியை முன்னிட்டு 12 மணி நேர பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள்: 40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: