ரூ.2 ஆயிரத்துக்காக மூதாட்டியை கொன்ற சிறுவன் : சடலத்தை செப்டிக் டேங்கில் போட்ட கொடூரம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரூ.2 ஆயிரம் பணத்துக்காக மூதாட்டியை கொலை செய்த சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே வி.அகரம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மனைவி செல்வபாக்கியம் (68). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி பக்கத்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற செல்வபாக்கியத்தை அதன்பிறகு காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் பழனிவேல் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து வளவனூர் போலீசார் நேற்று இரவு சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, அவர் மீது மேலும் சந்தேகம் எழுந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மூதாட்டி செல்வபாக்கியத்தை, கொலை செய்ததை போலீசாரிடம் சிறுவன் ஒப்புக் கொண்டார்.பின்னர் அருகிலுள்ள வீட்டு கழிப்பறை செப்டிக் டேங்கில் மூதாட்டி செல்வபாக்கியத்தை கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நேற்றிரவு போலீசார் கழிப்பறை செப்டிக் டேங்கை அகற்றி பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சிறுவனை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் 7வது வரை படித்துள்ளேன். தற்போது சென்னையில் தங்கி ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்வபாக்கியத்திடம் ரூ.2 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றதை அவர் கண்டு பிடித்துவிட்டார். என்னிடம் அந்த பணத்தை கேட்டு நச்சரித்தார். பின்னர் சென்னைக்கு சென்று விட்டேன். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தேன். அப்போது அவர் என்னிடம், திருடிய பணத்தை கொடுக்குமாறு கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் மூதாட்டியை கொலை செய்து கழிப்பறை செப்டிக் டேங்கில் புதைத்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் சிறுவனிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post ரூ.2 ஆயிரத்துக்காக மூதாட்டியை கொன்ற சிறுவன் : சடலத்தை செப்டிக் டேங்கில் போட்ட கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: