சென்னை: தமிழகத்தில் 5 முனைப்போட்டி உருவாகியுள்ள நிலையில், பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை எடப்பாடி முன்னிலையில் அமித்ஷாவே பங்கீடு செய்தார். பாஜவுக்கு 31 தொகுதிகள் முடிவாகியுள்ளது. சென்னையில் பங்கீடு ஒப்பந்தம் இன்று முறைப்படி கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கிடையே போட்டி உருவாகியுள்ளது. அதேபோல, 3வது மற்றும் 4வது இடத்துக்கு தவெக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. 5வது அணியை பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். மேலும், திமுக கூட்டணியைப் பொறுத்தவரை ஏற்கனவே இருக்கும் கட்சிகளோடு, புதிய கட்சிகளும் சேர்ந்துள்ளன. இதனால் திமுக கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணி பல கூறுகளாக பிரிந்துள்ளது. குறிப்பாக அதிமுக என்ற கட்சியே பல பிரிவுகளாக பிரிந்துள்ளன.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அவர்கள் கூட்டணிக்கு வேண்டுமானால் வரட்டும். கட்சியில் சேர்க்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் திமுகவில் சேர்ந்துவிட்டனர்.
செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து விட்டார். சசிகலா தனியாக ராமதாசுடன் அணி சேர்ந்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்பட்டு வந்த தேமுதிக திடீரென திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது. இது அதிமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேமுதிக இல்லாததால் தங்களுக்கு கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் பேச்சுவார்த்தையை எடப்பாடி பழனிசாமி தள்ளிப்போட்டு விட்டார். மேலும் தவெகவை கூட்டணிக்கு இழுப்பது தொடர்பாக பாஜ மேலிடம் பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியது.
அப்போது 90 தொகுதிகள், ஒரு துணை முதல்வர், 2 அமைச்சர் பதவிகளை தவெகவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பாஜ கோரிக்ைக விடுத்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்கும். கூட்டணி அமைச்சரவை கிடையாது. தவெகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக கூறிவிட்டார். இதனால் தவெக தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்து விட்டது.
ஆனாலும், பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்காமல் எடப்பாடி பழனிசாமி இழுத்தடித்து வந்தார். அதற்கு காரணம், தாமதமாக பேசினால், தாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகும் என்று எடப்பாடி பழனிசாமி கருதினார். இதனால் கோபமான ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இனி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனால் எடப்பாடியை டெல்லிக்கு வரும்படி அமித்ஷா அழைத்தார். இதனால் நேற்று காலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவின் அழைப்புக்காக இரவு 10.15 மணி வரை காத்திருந்தார். அதன்பின்னர் அழைப்பு வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை பலமுறை கடிந்து கொண்டுள்ளார்.
பின்னர் பாஜவுக்கு 31 தொகுதிகள், புதிய நீதிக்கட்சி, ஐஜேகேவுக்கு தலா 2 தொகுதிகள், பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும். இவர்களில் பலரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அமமுகவுக்கு 9, பாமகவுக்கு 18, தமாகாவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிடும் என்று அமித்ஷா கூறினார். இதை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை வருவார். அவருடன் ஒப்பந்தம் போடுங்கள் என்று கூறியுள்ளார். அதையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு அன்புமணியும், 10.15 மணிக்கு டிடிவி.தினகரனும் டெல்லி சென்றனர். அவர்கள் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக அமித்ஷா சில உத்தரவுகளை பிறப்பிக்கிறார். அதை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டு, அனைவரும் கூட்டாக இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்றும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படுகிறது என்கின்றனர் பாஜ தலைவர்கள்.
* சசிகலாவை மிரட்ட சொன்ன எடப்பாடி
அமித்ஷாவை சந்தித்தபோது, சசிகலா, ராமதாஸ் இணைந்து 5வது அணியை உருவாக்கியுள்ளனர். இதனால் சசிகலாவை மிரட்டி, தேர்தலில் நிற்கவிடாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவரும் பேசுவதாக கூறியுள்ளார். ஆனால் அடுத்த நாளே ராமதாசை சந்தித்த சசிகலா, கூட்டணியை அறிவித்து விட்டார். இனிமேல், அமித்ஷா பேசிய பிறகு தேர்தலில் இருந்து விலகுவாரா அல்லது எடப்பாடியை வீழ்த்த களம் காண்பாரா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
