கேரளா கண்ணூர்-சென்னை ஓடும் ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விருதுநகர் டிரைவர் போக்சோவில் கைது சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்

விழுப்புரம், ஆக. 3: கேரளா கண்ணூர்-சென்னை சென்ற ஓடும் ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக விருதுநகரை சேர்ந்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் சுமார் 25 பயணிகள் பயணித்தனர். அதில் கேரளா தம்பதியினர் தனது 9 வயது மகளுடன் சென்னைக்கு பயணித்தனர்.

இதனிடையே நள்ளிரவு சேலம் பகுதியில் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் மாற்று டிரைவரான விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் ஞானவேல் (40) என்பவர் டிரைவரின் இருக்கையின் பின்புறம் படுத்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியின் ஆடையை விலக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதனை தனது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை எதிரே இருந்த சக பயணி பார்த்துவிட்டு அவரது பெற்றோரிடம் தெரிவிக்கவே டிரைவர் ஞானவேலிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவரது செல்போனை தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டனர். ஒரு வழியாக தலைவாசல் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது ஞானவேல் செல்போனை பிடுங்கிப் பார்த்தபோது சிறுமியை ஆபாசமாக படம், வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஞானவேலிடம் தகராறு செய்தனர். அதற்குள் பேருந்து விழுப்புரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு விட சொன்ன கேரள தம்பதியினர் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்து காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும் ஞானவேலின் செல்போனை பார்த்தபோது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்திருந்ததை உறுதி செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆதாரத்தை அழிக்க முயன்ற டிரைவர்…
ஓடும் ஆம்னி பேருந்தில் பாலியல் சீண்டலில் சிக்கிய டிரைவர் உரிய ஆதாரம் இருந்ததால் அவர் உடனடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆம்னி பேருந்து நீண்ட தூரம் செல்வதால் 2 டிரைவர்கள் இருப்பார்கள். அப்படித்தான் கண்ணூரில் இருந்து பாதி தூரம் வந்ததும் ஞானவேல் தூங்கச் சென்றுள்ளார். சேலம் அருகே வந்தபோது டிரைவர் ஞானவேல் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு புகைப்படம் எடுத்ததை சக பயணி பார்த்துள்ளார். அப்போது அவரது பெற்றோரிடம் தெரிவித்து செல்போனை பிடுங்க எவ்வளவோ முயற்சித்தனர்.

ஆனால் நீண்ட நேரமாக செல்போனை கொடுக்காமல் அதிலிருந்த வீடியோவையும், புகைப்படத்தையும் டெலிட் செய்ய முயற்சித்தபோதுதான் பேருந்திலிருந்த மற்ற பயணிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவரிடமிருந்து செல்போனை பிடுங்கியுள்ளனர். இல்லையென்றால் இந்த வீடியோவை டெலிட் செய்து அவர் தப்பித்திருப்பார். செல்போனில் எடுத்த வீடியோ, ஆதாரத்தை வைத்து அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்து உடனடியாக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

The post கேரளா கண்ணூர்-சென்னை ஓடும் ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விருதுநகர் டிரைவர் போக்சோவில் கைது சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம் appeared first on Dinakaran.

Related Stories: