அனுமன் ஜெயந்தி கோலாகலம்

ஊட்டி, டிச. 20: ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கடந்த 10ம் தேதி மகா சுதர்சன ஹோமத்துடன் விழா தொடங்கியது. 11ம் தேதி வாழைப்பழ அலங்காரம், 12ம் தேதி வெண்ணை காப்பு அலங்காரம், 13ம் தேதி உலர் பழம், 14ம் தேதி வெற்றிலை சாத்து, 15ம் தேதி ராஜ மாருதி, 16ம் தேதி செந்தூரக் காப்பு, 17ம் தேதி கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அலங்கார திருமஞ்சனம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் வெண்ணெய், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை ஆகியவை அனுமனுக்கு சாற்றி வழிபட்டனர். அதேபோல ஊட்டி வேணுகோபால சுவாமி கோயில், புதுமந்து மற்றும் வேலிவியூ பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் வடை மாலை உள்ளிட்ட அலங்காரங்களில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.

Related Stories: