அந்தியூர்,டிச.20: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி ஒந்தனை ஆழ்வார்த்திப் பகுதியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் மற்றும் பர்கூர் வனத்துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மின்சாரம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறதா என கூட்டாய்வு நடத்தினர். இதில் ஒந்தனை ஆழ்வார்த்திப் பகுதியைச் சேர்ந்த பசுவன் என்பவர் பட்டா நிலத்தில் முறையற்ற வகையில் வீட்டிற்கும், தனது விவசாய நிலத்திற்கும் மின்வேலி அமைத்து மின்சாரத்தை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ரூ.10 ஆயிரத்து 875 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆய்வுசெய்த அதிகாரிகள் கூறும்போது, அனுமதியற்ற முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவதால், மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பையும், பாதுகாப்பற்ற முறையில் மின்வேலியில் மின்சாரம் செலுத்துவதன் மூலம் வனவிலங்குகள் உயிரிழப்பை தவிர்க்கவும், மின்வேலிகள் அனுமதி பெறாமல் பயன்படுத்தி வருவதை கூட்டாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
