குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவரை இடிக்க உத்தரவு

குன்னூர் :  குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவரை  இடிக்க முதன்மை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் முதல் கல்லார் வனப்பகுதி வரை யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்கு நடுவே நெடுஞ்சாலை மற்றும் மலை ரயில் பாதையும் அமைந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் சார்பில் ‌மேம்பாட்டு பணி மேற்கொண்டு மலை ரயில் தண்டவாளத்தில் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து வந்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் யானைகள் வழிபாதையை மறித்து தடுப்புச்சுவர் அமைத்தனர்.இதனால் யானைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில் கடந்த வாரம் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் தண்ணீருக்காக காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து தண்டவாளத்திற்கு வந்தன. பாதை மறிக்கப்பட்டதால் யானைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது. மேலும் குன்னூர் முதல் முதல் கல்லார் வரை யானை வழித்தடங்கள் மற்றும் யானை கடந்து செல்லும் பாதைகளில் உள்ள தடுப்புச்சுவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நேற்று முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், நீலகிரி மாவட்டம் வன அலுவலர் சச்சின் துக்காராம், குன்னூர் வனச்சரகர் ஆகியோர் ட்ராலி மூலம் குன்னூர் முதல் கல்லார் வரை மலை ரயில் பாதையில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்‌. அப்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் யானை வழித்தடத்தை மறித்து ரயில்வே துறையினர் தடுப்புச்சுவர்களை கட்டியிருப்பது தெரியவந்தது.அந்த தடுப்புச்சுவர்களை இடிக்க முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த இடங்கள் அனைத்தும் குறித்து வைக்கப்பட்டன. விரைவில் அந்த தடுப்புச்சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக ரயில்வே துறையினர் உத்தரவாதம் அளித்துள்ளனர்….

The post குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவரை இடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: