காரிமங்கலம், ஜூலை 25: காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக, அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது. இந்த பஸ்சை டிரைவர் பாரதிராஜா என்பவர் ஓட்டிச்சென்றார். வெற்றி குமார் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். இந்த பஸ் ரதிண்டல் ஊராட்சி சவுளுப்பட்டி பகுதியில் சென்ற போது ரோட்டில் தள்ளாடியபடி நடந்துசென்றவரை விலகிச் செல்லும்படி டிரைவர் பாரதிராஜா பஸ் ஹாரனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, பஸ் டிரைவருடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள், போதை ஆசாமியை கண்டித்துள்ளனர். இதையடுத்து அவர் சென்றுவிட்டார். பஸ் புறப்பட்டு சென்றுவிட்டது. இந்நிலையில் பஸ் திப்பம்பட்டிக்கு சென்று விட்டு, மீண்டும் காரிமங்கலம் நோக்கி சென்றது. அப்போது சவுளுப்பட்டி பகுதியில் நின்றிருந்த போதை ஆசாமி, பஸ்சின் முன்புறம் மீது கல்வீசி எறிந்து விட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. இதில் டிரைவர் மற்றும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பஸ் கண்டக்டர் வெற்றிகுமார் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்ஐ சுந்தரமூர்த்தி ஆகியோர் பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடிய மேல் சவுளுப்பட்டியை சேர்ந்த கணேசன் (32) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.
