ராஜபாளையம், ஜூலை 20: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி வியாபாரிகள்- விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் ராஜபாளையம், வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த பருத்தி விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜபாளையம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சீனியம்மாள், மேற்பார்வையாளர் வேல்முருகன் மற்றும் வில்லிப்புத்துார் விற்பனைக்கூட மேற்பார்வையாளர் பொன்னுச்சாமி ஆகியோர் பருத்தியை இ-நாம் திட்டத்தின் மூலம் சந்தைப்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பருத்தியை 8 சதவீதத்திற்கு ஈரப்பதம் மிகாமல் நன்கு உலர்த்தி தரம் பிரித்து கொண்டுவரும் பட்சத்தில் தரத்திற்கேற்ப கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தனர்.
விவசாய சங்க தலைவர் ராமச்சந்திரராஜா, சேத்தூர் அம்மையப்பன், ஆகியோர் மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் பருத்தியை விற்பனை செய்வது குறித்தும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். இதில், சிசிஐ எனப்படும் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தியை கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணியாளர்கள் மற்றும் இ-நாம் திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post ராஜபாளையத்தில் வியாபாரிகள் – விவசாயிகள் கலந்துரையாடல் appeared first on Dinakaran.
