அரியலூர், ஜூலை 18: அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முதல் வழங்க வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அரியலூர் அண்ணாசிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 170 ஆசிரியைகள் உட்பட 280 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் எழில், கருணாநிதி, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
The post கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆசிரியர்கள் மறியல் appeared first on Dinakaran.
