சிக்கல் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நாகப்பட்டினம் கலெக்டர் மனுக்களை பெற்றார்

கீழ்வேளூர், ஜூலை 18: நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல், ஆவராணி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், சிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதே போல திருமருகல், மருங்கூர், நெய்குப்பை ஆகிய பகுதிகளுக்கான முகாம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை நாகை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட மனுக்களின் உடனடி தீர்வாக 2 பயனாளிகளுக்கு இருப்பிட சான்றுகள், மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த 1 பயனாளிக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான நகலினையும், 1 பயனாளிக்கு வருமான சான்று மற்றும் சாதி சான்றுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும், திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் நிற்பதற்கான உதவி உபகரணம் கோரி விண்ணப்பித்தார். இந்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,750 மதிப்பீட்டில் உதவி உபகரணம் வழங்கப்பட்டது. இது குறித்து நாகை கலெக்டர் ஆகாஷ் கூறுகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் 31 முகாம்களும், கிராமப்புற பகுதிகளில் 66 முகாம்களும் கூடுதலாக 97 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 14.08.2025 வரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் 10 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 4 முகாம்களும், ஊரக பகுதிகளில் 22 முகாம்களும் கூடுதல் 36 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

மேலும் அனைத்து பகுதிகளையும் கவரும் வகையில் வீடுவீடாக மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்களும் வழங்கி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதைப்போல் அடுத்த இரண்டு கட்டங்களாக தெரிவிக்கப்படும் நாட்களில் முகாம்கள் நடத்தப்படும். முகாமில் நாகப்பட்டினம் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கண்ணன், நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சிக்கல் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நாகப்பட்டினம் கலெக்டர் மனுக்களை பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: