கமல்ஹாசனுக்கு முந்தைய காதல் இளவரசன்

தமிழில் 5 ஆண்டுகளில் 50 படங்களாவது நடித்திருப்பார், சுதாகர். கடந்த 1980ல் மட்டும் அவர் ஹீரோவாக நடித்த 7 படங்கள் திரைக்கு வந்தன என்பது, அக்காலத்து திரையுலகின் பரபரப்புச் செய்தி. தமிழ்ப் படவுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோரின் காலத்துக்குப் பிறகு சிறிய வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என்று துடித்த பல இளம் நடிகர்களில் சுதாகரும் ஒருவர். அவரது காலத்தில்தான் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தனித்தனியாக வளர்ந்து வர ஆரம்பித்தனர். 1980களில் ரசிகைகளுக்கு காதல் இளவரசன் கமல்ஹாசனுக்கு முந்தைய காதல் இளவரசன் சுதாகர் என்று சொல்லப்பட்டது. சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்தபோது, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் செட்டாக இருந்த சுதாகர், திடீரென்று சிரஞ்சீவிக்கு முன்பு திரையுலகிற்குள் நுழைந்தார்.

1978ல் அவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் அன்றைய டிரெண்டை திருப்பிப் போட்ட படம், ‘16 வயதினிலே’. இப்படத்தின் மூலம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற அறிமுக இயக்குனர் பாரதிராஜாவை ஒட்டுமொத்த இந்தியப் படவுலகும் திரும்பிப் பார்த்து வியந்தது. அப்படத்தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படம், ‘கிழக்கே போகும் ரயில்’. இதில் ஹீரோவாக சுதாகர் அறிமுகமானார். அவரது ஜோடியாக நடிக்க முதலில் வடிவுக்கரசியை நேரில் வரவழைத்த பாரதிராஜா, திடீரென்று அவரை நிராகரித்தார். பிறகு நடிகவேள் எம்.ஆர்.ராதா மகள் ராதிகாவை ஹீரோயினாக அறிமுகம் செய்தார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சுதாகர், ராதிகா ஜோடி 11 படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. பிறகு பாரதிராஜா உதவியாளர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் சுதாகர் ஹீரோவாக நடித்தார். பிறகு பாரதிராஜா திடீரென்று ஹீரோவாக நடித்து இயக்கிய ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில், இன்னொரு ஹீரோவாக சுதாகர் நடித்தார்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’, ரஜினிகாந்துடன் ‘அதிசய பிறவி’ ஆகிய படங்களில் நடித்த சுதாகர், உண்மையில் ஒரு அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். அன்றைய காலக்கட்ட திரையுலகிலும், ரசிகர்கள் மனதிலும் அவருக்கு அழியாத இடம் இருக்கிறது. இப்போது கூட அவரது சில பழைய படங்களின் பாடல்களைக் கேட்டால், உடனே மனம் அந்தக்காலத்துக்கே சென்றுவிடும். ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘மாந்தோப்பு கிளியே’, ‘எங்க ஊரு ராசாத்தி’, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘கரும்பு வில்’, ‘கரை கடந்த ஒருத்தி’, ‘தைப்பொங்கல்’ என்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களில், ‘கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ… இங்கு வந்ததாரோ’, ‘மாஞ்சோலை கிளிதானோ… மான்தானோ… வேப்பந்தோப்பு கிளியும் நீதானோ’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்… அமுத கீதம் பாடுங்கள்’, ‘சிறு பொன்மணி அசையும்… அதில் தெறிக்கும் புது இசையும்’, ‘காதல் வைபோகமே… காணும் நன்னாள் இதே… வானில் ஊர்கோலமாய்’, ‘பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன்… நான் வந்த நேரம் அந்த மான் அங்க இல்லே’, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’ என்பது போன்ற பாடல்களை தனிமையில் அமர்ந்து கேட்டுப் பாருங்கள், சுதாகர் கண்முன் தோன்றுவார்.

சுதாகருக்குப் போட்டியாக அப்போது விஜயன் வலம் வந்தார் என்றாலும், ஒருகட்டத்தில் அவர்கள் திடீரென்று காணாமல் போனார்கள். பிறகு தனது தாய்மொழி தெலுங்கில் நிறைய படங்களில் நடித்த சுதாகர், தனது தவறான செய்கைகளின் காரணமாக இமேஜை கெடுத்துக்கொண்டார். பிறகு அவரிடம் இருந்து ஹீரோ வாய்ப்பு நழுவியது. 1990களின் தொடக்கத்தில் தெலுங்கில் காமெடி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவரது குரல் மற்றும் மிமிக்ரி செய்யும் திறமை பேருதவி செய்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் சுதாகர் நடித்திருந்தார். ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்திலுள்ள மார்க்கபுரத்தில் கடந்த 1959 மே 18ம் தேதி பிறந்த சுதாகரின் தந்தை, ஆந்திரா முழுக்க பயணித்த துணை ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. 6 சகோதரர்களில் இளையவரான அவர், குண்டூரிலுள்ள ஆந்திரா-கிறிஸ்டியன் கல்லூரியில் இடைநிலை வரை படித்தார். 1976ல் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அங்கு சிரஞ்சீவி, ஹரி பிரசாத் ஆகியோரை சந்தித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் சுதாகர், தெலுங்கில் சில படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார்.

The post கமல்ஹாசனுக்கு முந்தைய காதல் இளவரசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: