புதுச்சேரி, ஜூலை 8: புதுச்சேரியில் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளில் சேர நீட்-எம்டிஎஸ் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களிடமிருந்து கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நேற்று முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிஜி நீட் – எம்டிஎஸ் தேர்வில் பரிந்துரைக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இடஒதுக்கீட்டின் கீழும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிலை விண்ணப்பதாரர்களின் டேஷ்போர்டு உள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்குள் குறைகள் விருப்பத்தின் கீழ் டேஷ்போர்டில் உள்நுழைவை பயன்படுத்தி தெரிவிக்கலாம். மேலும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வருவாய் சான்றிதழ்களை சமர்ப்பிக்காததால், கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் முறையான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நாளை (9ம் தேதி) மதியம் 1 மணிக்குள் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று ஒதுக்கீட்டிற்கான சீட் மெட்ரிக்ஸ் வெளியிடப்பட்ட பிறகு தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாட விருப்பங்களை புதுப்பிக்கலாம். பாட விருப்ப தேர்வுகள் காலியாக உள்ள விண்ணப்பதாரர்கள் சீட் ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு ஆட்சேபனை தெரிவிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
