கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஜல்லி, மணல் வியாபாரியை லாரியில் கடத்தி பணம் பறிப்பு

துரைப்பாக்கம்: கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஜல்லி, மணல் வியாபாரியை லாரியில் கடத்தி ரூ.30 ஆயிரம் பறித்த 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் காண்டீபன் (38), கட்டிட பணிக்காக மொத்த வியாபாரிகளிடம் இருந்து ஜல்லி, மணல், எம்-சான்ட் போன்றவற்றை வாங்கி சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், திரிசூலம் பகுதியை சேர்ந்த ஜல்லி, மணல், எம்-சான்ட் மொத்த வியாபரத்தில் ஈடுபடும் ரஞ்சித் மோசஸ்(30), ஆரிஷ் மோகன்ராஜ்(22) ஆகியோரிடம் ரூ.32 ஆயிரம் வியாபார தொகை கடந்த 6 மாதமாக பாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், காண்டீபன் கடந்த மாதம் 26ம் தேதி ரஞ்சித் மோசஸிடம் போன் செய்து, தனக்கு ஒரு லோடு எம்-சான்ட், ஒரு லோடு ஜல்லி வேண்டும் என்றும் அதற்கான தொகை ரூ.29 ஆயிரத்து 150ஐ தந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து, அன்று இரவு 9 மணியளவில் ரஞ்சித் மோசஸ் மற்றும் ஹரிஷ் மோகன்ராஜ் ஆகியோர் சென்னை பல்லாவரத்தில் உள்ள இடத்தில் இருந்து சொந்த டிப்பர் லாரியில் காண்டீபன் கேட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரியில் அவருடன் திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியில் காண்டீபன் சொன்ன இடத்தில் பொருட்களை இறக்கிவிட்டு திரும்பி சென்றனர்.

அப்போது, காண்டீபனை லாரியில் ஏற்றிக்கொண்டு அவரது வீடு இருக்கும் இடமான கொட்டிவாக்கம் பகுதியில் இறக்கி விடாமல் திரிசூலம் பகுதியில் உள்ள ஜல்லி உடைக்கும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காண்டீபனிடம் இருந்த 30 ஆயிரத்து 500 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டனர்.
பிறகு மீண்டும் தற்போது வாங்கியுள்ள பொருட்களுக்கான தொகை ரூ.29 ஆயிரத்து 150 ரூபாயை சீக்கிரம் கொடுக்கவில்லை. எனில், காலி செய்து விடுவோம் என மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து தப்பிய காண்டீபன் அடையாறு துணை காவல் ஆணையர் அலுவலகம் சென்று நடந்த சம்பவங்கள் பற்றி புகார் அளித்தார். அதன்பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காண்டீபனை லாரியில் கடத்திச் சென்று மிரட்டி பணத்தை பறித்த ரஞ்சித் மோசஸ், ஹரிஷ் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். பிறகு இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ரூ.32 ஆயிரம் பாக்கி பணத்திற்காக வியாபாரியை லாரியில் கடத்திச் சென்று மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஜல்லி, மணல் வியாபாரியை லாரியில் கடத்தி பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: