புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் கோடை விழா வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது

புதுக்கோட்டை, ஜூன் 24: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சித்தன்னவாசல் கோடை விழா – 2025 நடைபெறும் நிகழ்வுகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு, மாவட்ட கலெக்டர் அருணா நேற்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களிடையே பாரம்பரிய கலை, பண்பாட்டை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் சித்தன்னவாசல் கோடை விழா வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் சித்தன்னவாசலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, அனுமதி இலவசமாகும். இதில், முதல் நாளான 26ம் தேதி அன்று காலை 10 மணியளவில் அரசு இசைப்பள்ளியின் வரவேற்பு நடனமும், மல்லர் கம்பமும், பெண்களுக்கான கபாடி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான, பல்லாங்குழி, பரமபதம், உறியடித்தல், கல்லாங்காய், கிட்டிபில்லு, பலூன் உடைத்தல், நொண்டி அடித்தல், லக்கிக் கார்னர், ஹாக்கி மற்றும் கால்பந்து திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

மேலும், பிற்பகல் 3 மணியளவில் மதுரை கலைமாமணி, கோவிந்தராஜ் கட்டைக்கால் ஆட்டம் நிகழ்ச்சியும், தப்பாட்டம், அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் நடனம், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் ‘போதை விழிப்புணர்வு. குறித்த நாடகமும், அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் மற்றும் கிராமிய இசை நிகழ்ச்சி, நையாண்டி மேளம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இரண்டாம் நாளான 27ம் தேதி அன்று காலை 10 மணியளவில், ஆண்களுக்கான சிலம்பம், கபாடி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான, பல்லாங்குழி, பரமபதம், உறியடித்தல், கல்லாங்காய், கிட்டிபில்லு, பலூன் உடைத்தல், நொண்டி அடித்தல், லக்கிக் கார்னர், ஹாக்கி மற்றும் கால்பந்து திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் பிற்பகல் 3 மணியளவில் ரூபினி குழுவினர்களின் பரதநாட்டியமும், புதுக்கோட்டை தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டுப்புறப் பாடல்களும், புதுக்கோட்டை மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் பெண்களின் முன்னேற்றம் நடனம் மற்றும் தமிழ் வளர்ச்சி நடனமும், கிராமிய நடனம், பரதநாட்டியம், கலைச்சுடர்மணி முத்து முகமது குழுவினரின் நாட்டுப்புற தெம்மாங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
எனவே, சித்தன்னவாசல் கோடை விழாவில் அதிக அளவிலான பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்கள் கலந்துகொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).முருகேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் கோடை விழா வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: