பால் உற்பத்தியாளர் சங்க பதிவேடு கொள்முதல் முறைகேடு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரை சேர்ந்த கிறிஸ்துதாஸ், 1989ல் கூட்டுறவு சங்க மூத்த ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். 2019ல் பால்வளத்துறையில் கூடுதல் கமிஷனரானார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகள் தொடர்பாக கொள்முதல் தணிக்கை நடந்தது. இதில் கிறிஸ்துதாஸ், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்து 33 ஆயிரத்து 953 இழப்பு ஏற்படுத்தியதாக தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அப்போதைய பால்வளத்துறை இயக்குனர் சி.காமராஜ், அப்போதைய கமிஷனர் வள்ளலார் மற்றும் கிறிஸ்துதாஸ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இதையடுத்து கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதி மறுத்து 2022 மே 20 மற்றும் 31ல் கால்நடை மற்றும் பால்வளத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

அதை ரத்து செய்து ஓய்வு பெற அனுமதித்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி கிறிஸ்துதாஸ் ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு (காமராஜ், வள்ளலார்) எதிராக பொதுத்துறையில் ஒரு தனி நடவடிக்கை துவங்கப்பட்டது. அது அப்போதைய தலைமைச் செயலரால் முடித்து வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த காரணங்களை இந்நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. 2018 முதல் 2023 ஜூன் 30 வரை நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மீது 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எந்த அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை. துறைத்தலைவரின் துணையின்றி எந்த முறைகேடும் நடக்க முடியாது. நிறுவன தலைமை பொறுப்பில் சரியான நபர் இருந்தால், அவர்களின் துறைகளில் எந்த ஊழலும் இருக்காது.

14 முதல் 15 லட்சம் மாநில அரசு ஊழியர்களை கண்காணிக்க 100 முதல் 150 விசாரணை அதிகாரிகள் உள்ளனர். அரசு தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்பு கமிஷனர் தவறு செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிப்பதில் தைரியம், உறுதியை கொண்டிருக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் மிக சக்தி வாய்ந்தவர்கள். தவறு செய்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு எதிராக ஏற்கனவே துவங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். குற்றச்சாட்டிற்கான முகாந்திரத்திற்கு ஆதாரங்கள் இருப்பதால் ஐஏஎஸ் அதிகாரிகள் சி.காமராஜ், வள்ளலார் மற்றும் மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அடுத்தக்கட்ட மேல் நடவடிக்கையை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கையை ஒன்றிய அரசின் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

The post பால் உற்பத்தியாளர் சங்க பதிவேடு கொள்முதல் முறைகேடு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: