மானாமதுரை வழியாக நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை, ஜூன் 12: மானாமதுரை வழியாக இயக்கப்பட்ட நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மானாமதுரை- திருச்சி ரயில் பாதை மீட்டர் கேஜாக இருந்தபோது பல ஆண்டுகளாக நாகூர்-கொல்லம் இடையே பயணிகள் ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. ராமேஸ்வரம்-சென்னை இடையே தற்போது இயங்கும் போட்மெயில் ரயிலை போல மானாமதுரை வழியாக இயங்கிய மிகவும் பழமையான ரயிலாக இருந்தது. நாகூர்-கொல்லம் ரயிலானது தினசரி நாகூரிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 5.12 மணிக்கு வந்து சேரும். பின்னர், 5.13க்கு புறப்பட்டு காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், செங்கோட்டை, தென்மலை, கொட்டாரக்கரை வழியாக கொல்லத்துக்கு அதிகாலை 4.50 மணிக்கு செல்லும்.

இதேபோன்று, மறுமார்கத்தில் கொல்லத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை, காரகை்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக நாகூருக்கு மாலை 4.10 மணிக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் திருச்சி-மானாமதுரை வழித்தடம் அகல பாதையாக மாற்றப்படுவதற்காக கடந்த 2004ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மீண்டும் திருச்சி-மானாமதுரை வழித்தடம் அகலப்பாதையாக கடந்த 2007ல் மாற்றப்பட்டது. ஆனால், நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. மானாமதுரை ஜங்ஷன் என்பதால் இந்த ரயிலில் இருந்து இறங்கி மதுரை, ராமேஸ்வரம் செல்வதற்கு வசதியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளுடன் கேரளா மாநிலத்தை இணைக்கும் ஒரே ரயிலாக ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் இயங்கியது. 20 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

The post மானாமதுரை வழியாக நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: