தேவதானப்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை

தேவதானப்பட்டி, ஜூன் 12: தேவதானப்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடியில் தேயிலை கொசு தாக்குதலை கட்டுப்படுத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பகுதி மற்றும் தேவதானப்பட்டி பகுதிகளில் அதிக இடங்களில் முருங்கை சாகுபடி நடைபெறுகிறது. மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் முருங்கை முக்கியமாக ஆண்டிபட்டி காய்கறி கமிஷன் கடைகளுக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளிமாநில காய்கறி வியாபாரிகள், தேனி மாவட்ட முருங்கையை வாங்க ஆண்டிபட்டி காய்கறி கமிஷன் கடைகளுக்கு அதிகளவில் வருவர். இது தவிர மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கை கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டிபட்டி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் முருங்கையை வாங்கி பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இது தவிர வியாபாரிகள் நேரடியாக முருங்கை சாகுபடி நிலத்திற்கு சென்று, முருங்கையை அறுவடை செய்து பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

சாகுபடி பரப்பு குறைந்தது: தேனி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு பகுதிகளில் அதிகளவு நடைபெற்று வந்த முருங்கை சாகுபடி தற்போது கனிசமான அளவிலேயே செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் முருங்கை சாகுபடியில் நோய் தாக்குதல், பூ பூக்கும் தருணத்தில் சீதோஷ்னநிலை உள்ளிட்டவை ஆகும். ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய உழவு, முருங்கை நடவு, களையெடுப்பு, ரசாயன உரம், தொழு உரம், மருந்து தெளிப்பு என நடவு செய்ததில் தொடங்கி காய் அறுவடை செய்யும் வரை ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. முருங்கை வருடத்திற்கு இரண்டு முறை மகசூல் தரக்கூடிய நீண்டகால பயிராகும். முருங்கை சாகுபடியை பொறுத்தமட்டில் பூ பூக்கும் தருணத்தில் காற்றில் ஈரப்பதம் குறைந்தளவில் இருந்தால் மட்டுமே அதிகளவு மகசூல் கிடைக்கும். தேயிலை கொசு தாக்குதல்: முருங்கை சாகுபடியினை பொருத்தமட்டில் புழு தாக்குதலால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. புழு தாக்குதலுக்கு லேசான கெமிக்கல் மருந்துகளை பயன்படுத்தினால் போதும் கட்டுப்படுத்திவிடலாம்.

ஆனால் இந்த தேயிலை கொசு தாக்குதல் என்பது 90 சதவிகிதம் மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த வகையான கொசு, தேயிலை பயிரில் அதிகம் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த பூச்சிக்கு தேயிலை கொசு என பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த வகையான பூச்சி பருவமழை பெய்து அதிக குளிர்ச்சி, பனி, நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. முக்கியமாக வேப்ப மரத்திற்கு அதிகளவு ஈர்க்கப்பட்டு வேப்ப மரத்தை தாக்கி மரத்தை தீயில் கருக்கியது போல மரம் முழுவதும் காய்ந்து காணப்படும். முருங்கை சாகுபடி நிலத்தின் ஓரப்பகுதிகளில் உள்ள வேப்ப மரம், முருங்கை சாகுபடி அருகே ஏதாவது ஒரு பகுதியில் உள்ள வேப்ப மரம், இயற்கையாகவே முருங்கை சாகுபடி நிலத்தில் வேப்ப மரம் இவற்றை நோக்கி தேயிலை கொசு ஈர்க்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை தாக்கும் தேயிலை கொசு, அப்படியே முருங்கை மரத்திற்கு தாவுகிறது. இதனால் முருங்கை மரம் தீயில் கருகியது போல காய்ந்து முற்றிலும் சேதமடைந்துவிடும்.

விவசாயிகளுக்கு இழப்பு:இதனால் விவசாயி ஆறு மாத காலம் ஆயிரக்கணக்கில் தசகூலி செலவு செய்தது எல்லாம் நோய் தாக்குதலால் சேதமாகிறது. இதனால் முருங்கை சாகுபடி விவசாயிகள் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பாதிப்படைகின்றனர். தேவதானப்பட்டி பகுதியில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் படிப்படியாக சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்து விட்டது. ஆகையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை அலுவலகம் இணைந்து முருங்கை சாகுபடி நிலங்களில் நேரடியாக கள ஆய்வு செய்து, தேயிலை கொசு தாக்கும் நேரத்தில் முருங்கை சாகுபடி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி, மானிய விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் என தேவதானப்பட்டி பகுதி முருங்கை சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவதானப்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Related Stories: