விருதுநகர், ஜூன் 12: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ள திறன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி தொழில் நுட்ப பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ITES மற்றும் BPO பயிற்சி, UI/UX இணைய தொழில் நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 21 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் வழங்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு திறன், வேலை வாய்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.
