ராமநாதபுரம், மே 16:திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
ராமநாதபுரம் தனியார் விடுதியில் திமுக மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, தலைமை கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என திமுக அமைப்பு ரீதியிலான முக்கிய பொறுப்புகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு தொகுதி வாரியாக உள்ள தொகுதி பொறுப்பாளர்கள், நியமிக்கப்பட்டுள்ள பாகமுகவர்கள், வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள், மாவட்டத்திலுள்ள திமுக கட்சி ரீதியாக உள்ள 28 ஒன்றியங்களின் ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள் என அனைவரும் களப்பணியாற்ற வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கும், மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், மகளிர், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் 4 தொகுதிகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர், சாலை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள், திட்டப்பணிகள், நிறைவேற்றப்பட்டுள்ள நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலம் இளம் தலைமுறை வாக்குகளை முழுமையாக பெற திமுக இளைஞரணி, ஐ.டி விங் அணிகளை பயன்படுத்த வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்வரால் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச்செய்ய பாடுபட வேண்டும் என அறிவுறுத்தி ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் எம்எல்ஏ முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு appeared first on Dinakaran.
