புதுக்கோட்டை, மே 11: பெருகி வரும் மக்கட் தொகைக்கேற்ப இறைச்சி மற்றும் பால் உற்பத்தியில் நல்ல விலை கிடைப்பதால், நவீன மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை அமைது விவசாயத்துடன் இரட்டிப்பு லாபம் பெறலாம் என புதுக்கோட்டை மண்டல கால்நடைப்பண்ணை ஆராய்ச்சி மைய பேராசிரியர் புவரஜான் தெரிவித்தார்.
மாட்டுப் பண்ணை: தரமான பால் உற்பத்திக்கு சரிவிகித தீவன உற்பத்தி அவசியம். பண்ணை அமைப்பதற்குமுன் பசுந்தீவன உற்பத்தி 75 முதல் 90 நாட்களுக்கு முன் பயிரிடுதல் அவசியம். நாட்டு மாடுகள் வாங்குவதென்றால் சிந்து மற்றும் சிந்து கலப்பினமும், கலப்பின பசுக்கள் என்றால் ஜெஸ்ஸி இனமும் நம் நாட்டிற்கு மிகவும் உகந்தவை.
சந்தையில் மாடுகள் வாங்குவது தவிர்த்து அருகில் உள்ள பண்ணை மற்றும் நம் ஊரிலிருந்து 100 கி.மீ. தொலைவு வரை உள்ள மாடு வளர்ப்போரிடம் உள்ள பசுக்களையே வாங்க வேண்டும். பண்ணை அமையவுள்ள இடம் தண்ணீர் தேங்காமல் சற்று மேடாக இருக்க வேண்டும். குறிப்பாக பாலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.35க்கு மிகாமல் விற்பதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பின் பால்பண்ணையை ஆரம்பிக்காலம். இறுதியாக, பால்பண்ணை அமைக்க விரும்புவோர் அம்மாவட்டத்தில் உள்ள கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை அணுகி முறையான பயிற்சி எடுத்தப்பின் பண்ணை ஆரம்பித்தல் சாலச்சிறந்தது.
ஆட்டுப் பண்ணை: முதலாவதாக உள்ளுர் ஆடு இனங்கள் மற்றும் அவற்றிற்கான தீவனம் மற்றும் நோய்கள் என ஆடுவளர்ப்போரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றுடன் அருகில் உள்ள கால்நடைபயிற்சி மையத்தில் நடத்தப்படும் ஆடுவளர்ப்புபயிற்சியில் கலந்துகொண்டு அவற்றை விஞ்ஞானரீதியாக கொட்டில்முறை வளர்ப்பு குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.
ஆடு வளர்ப்பில் சாதகமான ஒன்று இறைச்சியின் குறையாத விலையாகும். இருப்பினும் அவ்விறைச்சி உற்பத்தி செய்ய காரணமான பசுந்தீவனம் (வேலிமசால், கோ-45, அகத்தி மற்றும் கோரைப்புல் (புதியரகம் ஊழகுள 31) என இவற்றை பயிரிடுதல் மற்றும் தீவனத்தில் சீரான உற்பத்தி என முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம். மிகவும் முக்கியமான ஒன்று காலத்தே நோய் வருமுன் தடுப்பூசி அளித்தல். ஆடு வளர்ப்பில் தடுப்பூசி அட்டவணைணை முறையாக பின்பற்றி ஆண்டுக்கு 4 முக்கிய நோய்களான கோமாரி (பிப்ரவரி மார்ச் ரூ ஜீலை ஆகஸ்ட்), பி.பி.ஆர் (செப்டம்பர்), அம்மை (அக்டோபர்) மற்றும் துள்ளுமாரி (நவம்பர்) என இந்நோய்களுக்கு எதிரான தடுப்பூசி அளிக்கப்படவேண்டியது உறுதி.
கோழிப் பண்ணை: முதலில் நாட்டுக்கோழியா, இறைச்சி கோழியா என முடிவு செய்யவேண்டும். நாட்டுக்கோழிகளில் நாமே விற்பனையை சந்தைபடுத்தலாம். இறைச்சி (பிராய்லர்) கோழி வளர்ப்பு தனியார் நிறுவனம் மூலமே பெரிய அளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. நாமே விற்பனை செய்ய அதிக முதலீடும் நிலையற்ற விலையும் உள்ளதால், சிறிய அளவு முதலீட்டில் முதன்முதலில் தொடங்க நாட்டுக்கோழிப்பண்ணையே சிறந்தது. நாட்டுக்கோழிகள் நல்ல இனங்களாக அசீல், கடக்நாத், கழுத்தறுப்பான், கொண்டைக்கோழி, சிறுவிடை பெறுவிடை என தரமானவற்றை அறிந்து, பயிற்சி மையம் மூலம் ஆலோசனைபெற்று பின் கோழிப்பண்ணை துவங்க வேண்டும்.
சந்தைப்படுத்த நல்ல வாய்ப்பு இருப்பினும் தொற்று நோய்களைப்பற்றி அறியாமல், கலப்பின இனங்களை வளர்த்திடவும் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே கோழிகளில் நோய்தாக்கினால் அனைத்து கோழிகளும் ஒரே நாளில் இறக்கவும் வாய்ப்புள்ளதால், நோய்தடுப்பு மேலாண்மைப்பற்றி நன்கு அறிதல் அவசியமாகிறது.
வெண்பன்றிப்பண்ணை: குறைந்த முதலீடு, வேலை நேரம் குறைவு மற்றும் அதிக இலாபம் என வெண்பன்றி வளர்ப்பில் சாதகமான அம்சங்கள் இருந்தாலும், அதன் இறைச்சிக்கான சந்தைப்படுத்த உள்ள வாய்ப்புகள் மற்றும் அதன் முக்கியத்தீவனமான உணவு விடுதியில் மீந்த உணவு மாற்றும் விடுதி கழிவு, திருமண மண்டப உணவு கழிவு என கிடைக்கும் பட்சத்தில் இப்பண்ணை லாபகரமானதாக அமையும். பண்ணை அமைக்க முறையான அனுமதி மற்றும் மாநகராட்சிஃநகராட்சி எல்லைக்கு அப்பால் அமைக்க வேண்டும். பண்ணை ஆரம்பிக்கும் முன் கால்நடை பயிற்சி மையத்தில் முறையான பயிற்சி மற்றும் ஆலோசனை பெற வேண்டும்.
வெண்பன்றி பண்ணைக்கு நிறைவான தண்ணீர் வசதி அவசியம். மேலும் குட்டிகள் பராமரிப்பு, கிடா வளர்ப்புமற்றும் சருமநோய் மேலாண்மை என நுண்ணியமாக அரசுப்பண்ணைகள் மற்றும் தனியார் வெண்பன்றி பண்ணைகளை பார்வையிட்டு பின் சொந்தமாக ஆரம்பித்தல் மிகுந்த பட்டறிவும் லாபகரமான பண்ணையாகவும் அமையபெறும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் முதன்முறையாக கால்நடை பண்ணை ஆரம்பிக்க நினைத்தால் முறையான பயிற்சி, சந்தைப்படுத்தும் உத்திகள், நோய் மேலாண்மை என இந்த முத்தான மூன்று கருத்துக்களை மனதிற்கொண்டு மேற்சொன்னவற்றையும் கவனித்து பண்ணை ஆரம்பித்தால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் மற்றும் பண்ணையையும் தொடர்ந்து நடத்த இயலும். இந்த தகவலை, புதுக்கோட்டை மண்டல கால்நடைப்பண்ணை ஆராய்ச்சி மைய பேராசிரியர் புவரஜான் தெரிவித்தார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் நவீன கால்நடை பண்ணைகள் அமைத்து இரட்டிப்பு லாபம் பெறலாம்: விவசாயிகளுக்கு மண்டல ஆராய்ச்சி மையம் அழைப்பு appeared first on Dinakaran.
