விக்கிரவாண்டி, ஏப். 29: விக்கிரவாண்டி அடுத்துள்ள மேல்கரணை விநாயகபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன், கூலி தொழிலாளி. இவரது மகன் தன்ராஜ் (23). இவருக்கு அவ்வப்போது வலிப்பு வரும் என்பதால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தன்ராஜ், அதே ஊரை சேர்ந்த நண்பர்களான ராஜாராம் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அங்கு நண்பர்கள் கரை மீது அமர்ந்திருந்த நிலையில், தன்ராஜ் கிணற்றில் குதித்துள்ளார். அப்போது திடீரென தன்ராஜூக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த சக நண்பர்கள் இருவரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் குதித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததையடுத்து தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் மோட்டார் பம்ப் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபடியே தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு தன்ராஜை சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கஞ்சனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி appeared first on Dinakaran.
